மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) மற்றும் ஸ்டார்ட்அப் ஹப் (MSH) இனைந்து, பாரதத்தில் விரிவாக்கப்பட்ட ரியாலிட்டி டெக்னாலஜி ஸ்டார்ட்அப்களை ஆதரிக்க, துரிதப்படுத்த முக நூல் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனமான மெட்டாவுடன் ஒரு கூட்டணி அமைக்கவுள்ளது. MeitY ஸ்டார்ட்அப் ஹப் என்பது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முன்முயற்சியாகும். இது தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், தொடக்கங்கள் மற்றும் அறிவுசார் பண்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு தேசிய தளம். ஸ்டார்ட்அப் ஹப் (MSH) ஆனது மூவாயிரத்துக்கும் அதிகமான தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களை ஆதரிக்கிறது. அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்களை உயர்த்தும் நோக்கத்துடன் இது செயல்படுகிறது. ‘ டிஜிட்டல் தயாரிப்புகளுக்கான அதிக தேவையை பூர்த்தி செய்ய சப்ளை தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு மற்றும் திறமைக்காக உலகம் பாரதத்தை எதிர்நோக்குகிறது. இந்த ஒத்துழைப்பு, வளர்ந்து வரும் மற்றும் எதிர்கால தொழில்நுட்பங்களில் திறன் வளர்ப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும். படைப்பாளிகள், டெவலப்பர்கள் மற்றும் துடிப்பான தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பு ஆகியவற்றின் பெரிய திறமைக் குழுவுடன், மெட்டாவேர்ஸில் பாரதம் தனித்துவமான ஒரு முக்கிய பங்கை வகிக்கும்’ என்று அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவாக்கப்பட்ட ரியாலிட்டி டெக்னாலஜி என்பது அனைத்து உண்மையான மற்றும் மெய்நிகர் ஒருங்கிணைந்த சூழல்கள் மற்றும் கணினி தொழில்நுட்பம் மற்றும் அணியக்கூடிய பொருட்களால் உருவாக்கப்பட்ட மனித இயந்திர தொடர்புகளைக் குறிக்கும் ஒரு குடைச் சொல்லாகும். இது ஆக்மென்டட் ரியாலிட்டி, கலப்பு ரியாலிட்டி மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி போன்ற பிரதிநிதித்துவ வடிவங்களையும் அவற்றுள் இடைக்கணிக்கப்பட்ட பகுதிகளையும் உள்ளடக்கியது.