பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்பும் நோக்குடன் 13,331 ஆசிரியர்களை சில மாதங்களுக்கு மட்டும் பணியமர்த்துவதற்கான அறிவிக்கையை கடந்த ஜூன் 23ம் தேதி பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டது. ஆனால், இரு மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில், இன்று வரை 20 சதவீத ஆசிரியர்கள் கூட நியமிக்கப்படவில்லை. 10,731 இடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன. பள்ளிகள் திறக்கப்பட்டு 73 நாட்கள் நிறைவடைந்து விட்டன. அடுத்த சில நாட்களில் காலாண்டுத் தேர்வுகள் தொடங்கப்பட உள்ளன. ஆனால், பெரும்பான்மையான அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் பாடங்களே நடத்தப்படாத நிலையில், மாணவர்களால் காலாண்டுத் தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்ள முடியும்? உடனடியாக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்றால் நடப்பு கல்வியாண்டு முழுவதும் பாடம் நடத்துவதற்கு ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். அப்படி ஒரு நிலை ஏற்படுவதற்கு பள்ளிக்கல்வித் துறையே காரணம் ஆகி விடக்கூடாது. எனவே, தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.