சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி கடந்த 27ம் தேதி முதல் ஆசிரியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்றுடன் 4வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது. போராட்டக்குழுவினருடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது. எனவே போராட்டம் தொடர்கிறது. போராட்டத்தில் சுமார் 79 ஆசிரியர்வ் ஆசிரியைகள் மயக்கம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். கல்வித்துறை அமைச்சருடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் வெற்றி கிடைக்காவிட்டால் எங்களது போராட்டம் தொடரும் என போராட்ட ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் தெரிவித்தார். இதுகுறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் செவ்வாய்க்கிழமை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க திறனற்ற தி.மு.க அரசு மறுக்கிறது. போராட்டம் தொடங்கி மூன்று நாட்கள் கடந்தும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இடைநிலை ஆசிரியர்களை சந்திக்காமல் இருப்பது இந்த திறனற்ற தி.மு.க அரசுடைய மெத்தனப் போக்கின் வெளிப்பாடு. தமிழக பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர்கள் வி.பி துரைசாமி, நாராயணன் திருப்பதி மற்றும் மாநில செயலாளர் சுமதி வெங்கடேஷ் ஆகியோர் இன்று இடைநிலை ஆசிரியர்களை சந்தித்து அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.