கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என அவரது மகனும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் அறிவித்திருந்தார்.இதன்படி 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இதைத்தவிர, சில நாட்களுக்கு முன்பு ரூ. 81 கோடி மக்களின் வரிப்பணத்தை செலவு செய்து அதில், கருணாநிதி நினைவிடத்தின் பின்பகுதியில் கடலுக்குள் 42மீ உயரத்தில் (திருவள்ளுவர் சிலையைவிட உயரமான) பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்கப்படும். இந்த பேனாவை சென்று பார்ப்பதற்காக நினைவிடத்தில் இருந்து 290 மீ தூரத்திற்கு கடற்கரை, 360 மீ தூரத்திற்கு கடலிலும் என 650 மீட்டர் தொலைவிற்கு பாலம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம் இதற்கு அனுமதி அளித்துள்ளது. இந்த பேனா நினைவுச் சின்னம் தொடர்பாக கடும் விமர்சனம் எழுந்து வரும் நிலையில், பேனா நினைவுச் சின்னத்திற்கு கடற்கரை ஒழுங்குமுறை ஆணைய அனுமதி பெறும் பணிகளை பொதுப்பணித் துறை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை மேற்கொள்வதற்கான ஆய்வு எல்லைகளை கோரி மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவுக்கு தமிழ்நாடு பொதுப்பணித் துறை கடிதம் எழுதியுள்ளது.