உற்பத்தித் திறன் அடிப்படையில் வரி

ஜி.எஸ்டி. அமைப்பு, தற்போது துறைவாரியாக வரி எய்ப்புக்கான வாய்ப்புகள் உள்ள ஓட்டைகளை அடைத்து வருகிறது. மேலும், கண்காணிப்பு, சோதனை, ஆய்வுப் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. இதனால் மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி வசூல் அதிகரித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஜி.எஸ்.டி கவுன்சில் தற்போது பான் மசாலா மற்றும் குட்கா நிறுவனங்கள் செய்யும் வரி எய்ப்புகள், முறைகேடுகளை தடுக்க நடவடிக்கைகளை எடுக்கத் துவங்கியுள்ளது. 2017ம் ஆண்டு ஜி.எஸ்.டி அமலாக்கம் செய்யப்பட்ட நாளில் இருந்து பான் மசாலா மற்றும் குட்கா தயாரிப்புத் துறையில் இருந்து ஜி.எஸ்.டி வரி வசூல் தொடர்ந்து குறைந்தது. இதை கண்டறிய, மே 2021ல் ஒடிசா நிதியமைச்சர் நிரஞ்சன் பூஜாரி தலைமையிலான ஜி.எஸ்.டி கவுன்சிலின் அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஆய்வுகளை நடத்தியது. அதில், பான் மசாலா மற்றும் குட்கா தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தி அளவை குறைத்து கணக்குக் காட்டி அதிகப்படியான வரி ஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டது. எனவே அவற்றின் தொடர் வரி எய்ப்புகளைத் தடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு முக்கியத் திட்டம் முன்வைக்கப்பட்டது. அதன்படி, பான் மசாலா மற்றும் குட்கா உற்பத்தி பொருட்கள் மீது வரி விதிப்பதை விட, அந்த நிறுவனங்களின் உற்பத்தித் திறன் அளவு அடிப்படையில் வரி விதித்தால் வரி எய்ப்பை எளிதாக தடுக்க முடியும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாரதத்தில் தற்போது புகையிலை பொருட்கள் மீது 290 சதவீத வரியும், பான் மசாலா பொருட்கள் மீது 135 சதவீத வரியும் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.