இந்திய ஹாக்கி அணியின் முன்னணி நட்சத்திரமாக சுமார் 16 ஆண்டுகள் இருந்தவர் தன்ராஜ் பிள்ளை. புனே நகருக்கு அருகில் உள்ள கட்கி என்ற ஊரில் தமிழர் குடும்பத்தில் பிறந்தவர் தன்ராஜ் பிள்ளை. அவரது தந்தை ஹாக்கி ஸ்டேடியத்தை பராமரிப்பவர். தந்தையுடன் ஹாக்கி ஸ்டேடியத்துக்கு அடிக்கடி சென்ற தன்ராஜ் பிள்ளை, இந்த விளையாட்டில் ஆர்வம் கொண்டார். உடைந்துபோன பழைய ஹாக்கி மட்டைகளைக் கொண்டு, ஹாக்கி விளையாடி பயிற்சி பெற்றார்.
சிறுவயதில் உள்ளூரில் ஏற்பட்ட சிறு பிரச்சினையில், போலீஸார் தன்னை கைது செய்து விடுவார்களோ என்று அஞ்சிய தன்ராஜ் பிள்ளை, தனது அண்ணனுடன் மும்பைக்கு இடம் பெயர்ந்தார். அங்குள்ள ஹாக்கி மைதானங்களில் பயிற்சி பெற்றார்.
இந்திய ஹாக்கி வீரர்களிலேயே 4 ஒலிம்பிக் போட்டிகள், 4 உலகக் கோப்பை போட்டிகள், 4 சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள், 4 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றில் விளையாடிய ஒரே ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை. அவரது தலைமையின் கீழ் 1998ம் ஆண்டில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியிலும், 2003ல் நடந்த உலகக் கோப்பை ஹாக்கி போட்டியிலும் பாரதம் வெற்றி வாகை சூடியது. ராஜீவ் காந்தி கேல் ரத்னா, பத்ம ஸ்ரீ உள்ளிட்ட விருதுகள் பெற்றுள்ளார் தன்ராஜ்.
பாங்காக் ஆசியாட் போட்டிக்கு பிறகு மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கும் விதமாக ஹாக்கி தேர்வுக்குழு, அவருடன் சேர்த்து சிலரை அடுத்த போட்டிக்கு தேர்ந்தெடுக்கவில்லை. இதில் அவரது கோபம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படி சில சர்ச்சைகளில் சிக்கிய தன்ராஜ் பிள்ளை, மெர்குரியல் (கோபம் உள்ளிட்ட எதிர்பாராத திடீர் மாற்றங்கள்) மனிதர் என்று வர்ணிக்கப்பட்டவர்.
1998ல் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியின்போது, சரியாக கோல்கீப்பிங் செய்யவில்லை என்று கூறி, அப்போதைய கோல் கீப்பரான ஆசிஷ் பல்லாலை மாற்றினார் தன்ராஜ் பிள்ளை. ஆனால், இதே போட்டியில் பெனாலிடி ஷூட் அவுட் முறையில் சிறப்பாக கீப்பிங் செய்து தன் திறமையை நிரூபித்தார் ஆசிஷ் பல்லால். பிறகு, தன் தவறை உணர்ந்து அவரிடம் மன்னிப்பு கேட்டார் தன்ராஜ் பிள்ளை. பாரதத்திற்காக 339 போட்டிகளில் ஆடிய அவர், 160 கோல்களை அடித்துள்ளார்.
லக்ஷ்மணன்