சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது வங்கி ஊழியர்கள் சிலர் எழுந்து நிற்கவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்தின்போது எழுந்து நிற்காதவர்களிடம் காரணம் கேட்டபோது, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என உயர்நீதிமன்றம் கூறியதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. வங்கி உயர் அதிகாரிகள், ‘தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை அளிப்பது உறுதி செய்யப்படும்’ என தெரிவித்தனர். இதனால், சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகம் முன்பு போராட்டமும் நடந்தது. தமிழக பா.ஜ.கவும் இதற்கு கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், தமிழக நிதியமைச்சர் தியாகராஜனை சந்தித்த, ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர் இந்த நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்தார்.