பத்ம விருதுகள் வென்ற தமிழர்கள்

நாட்டின் மிக உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ விருதுகள் ஆண்டுக்கொரு முறை குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படும். இந்த ஆண்டுக்கான விருதுகள் பட்டியலில் பத்ம விபூஷண் விருது 4 பேருக்கும் பத்ம பூஷண் 17 பேருக்கும் பத்ம ஸ்ரீ 107 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. பத்ம விருதுகள் பட்டியலில் ஒன்பது தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். அதில் ஏழு பேர் தமிழகப் பட்டியலிலும் நடராஜன் சந்திரசேகரன் மகாராஷ்டிரா என்றும் சுந்தர் பிச்சை அமெரிக்கா என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கின்றனர்.

சிற்பி பாலசுப்பிரமணியம்: பத்ம ஸ்ரீ விருது பெறவுள்ள சிற்பி பாலசுப்பிரமணியம், பொள்ளாச்சியை சேர்ந்தவர். கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். 1970களில் தீவிரமாக இயங்கிய வானம்பாடி கவிதை இயக்கத்தைச் சேர்ந்தவர். ‘ஒரு கிராமத்து நதி’ என்கிற இவரது புத்தகக்துக்காக சாகித்ய அகாடமி பரிசு பெற்றவர்.

சௌகார் ஜானகி: பத்மஸ்ரீ விருது பெறும் 90 வயது மூத்த திரைப்பட நடிகையான சௌகார் ஜானகி 450க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 3,000 க்கும் அதிகமான நாடங்களில் நடித்தவர். தென்னிந்திய மொழிகளில் தன்னுடைய தனித்துவமான நடிப்பின் மூலமாக பல்வேறு பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தவர்.

எஸ். தாமோதரன்: பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள தாமோதரன், கிராமாலயா சேவை நிறுவனத்தின் மூலம் கிராமப்புற பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டுக்காக உழைத்து வருகிறார். இவரது சமூக சேவைக்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

முத்துகண்ணம்மாள்: திருச்சி விராலிமலையைச் சேர்ந்த சதிராட்டக் கலைஞர், முத்துகண்ணமாள் பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒழிக்கப்பட்ட தேவதாசி மரபின் கடைசி வாரிசான முத்துக்கண்ணம்மாள், அரை நூற்றாண்டு காலமாக சதிர் நடனக் கலைக்குத் தன் வாழ்வை அர்ப்பணித்தவர்.

ஏ.கே.சி. நடராஜன்: திருச்சியைச் சேர்ந்த 90 வயதான கிளாரினெட் கலைஞர் ஏ.கே.சி நடராஜன் பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சென்னை மியூஸிகல் அகாடமியில் சங்கீத கலாநிதி என்ற பட்டம் பெற்றவர்.

மருத்துவர் வீராச்சாமி சேஷய்யா: சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர் வீராச்சாமி சேஷய்யாவுக்கு இந்த ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்லேஷ் பஜந்திரி: பத்மஸ்ரீ  விருது பெறும் பல்லேஷ் பஜந்திரி கஜல் பாடகர், ஷெனாய் இசை கலைஞர். கர்நாடகாவை பூர்விகமாக கொண்ட இவர் தமிழத்தின் கலைமாமணி, கர்நாடக கலாஸ்ரீ உள்ளிட்ட மாநிலங்களின் கலைக்கான உயரிய விருதுகளைப் பெற்றவர். ஹிந்துஸ்தானி இசையில் தன்னிகரற்று விளங்குபவர்.

ஏ.வி. முருகையன்: புதுச்சேரி மடுகரை அடுத்த விழுப்புரம் கொங்கம்பட்டுவைச் சேர்ந்தவர் ஏ.வி முருகையன். தவில் இசைக்கலைஞரான இவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் அரசு இசைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.