உச்சநீதிமன்ற நீதிபதியாக தமிழர் பதவியேற்பு

தமிழகத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கேவி விஸ்வநாதன் மற்றும் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் ஆகிய இருவரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் அளித்த பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்தது. இதையடுத்து நேற்று இருவரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர். இவர்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டு இருக்கும் மூத்த வழக்கறிஞர் கே.வி. விஸ்வநாதன் தமிழகத்தை சேர்ந்தவர். கோவை சட்டக் கல்லூரியில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பை பயின்ற அவர், கடந்த 1998ம் ஆண்டு தமிழக பார் கவுன்சில் வழக்கறிஞராக பதிவு செய்தார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக ஆஜராகி வருகிறார். குற்றவியல் சட்டம், அரசியலமைப்புச் சட்டம், வணிகச் சட்டம், திவால் சட்டம் உள்பட பல்வேறு சட்டம் சார்ந்த வழக்குகளில் ஆஜராகி வந்துள்ளார். தற்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் கோரும் வழக்கில், மனுதாரர்கள் சார்பில் கே.வி.விஸ்வநாதன் ஆஜராகி வாதாடி வந்தார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக இன்று பதவியேற்க இருக்கும் கேவி விஸ்வநாதன் வரும் 2030ம் ஆண்டு இவர்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு உள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 34. இதில், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, மற்றும் எம்.ஆர். ஷா ஆகியோர் அண்மையில் ஓய்வு பெற்றனர். இதனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக குறைந்தது. நீதிபதி கே.எம். ஜோசப் ஜூன் 16ம் தேதியும் நீதிபதி அஜய் ரஸ்தோகி ஜூன் 17ம் தேதியும் நீதிபதி வி. ராசுப்பிரமணியன் ஜூன் 29ம் தேதியும் நீதிபதி கிருஷ்ண முரளி ஜுலை 8ம் தேதியும் ஓய்வுபெற இருக்கிறார்கள். இதனால் உச்ச நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக குறைந்து விடும். இதையடுத்து உச்ச நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் தற்போது இரண்டு பேரை பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.