தமிழக காவல்துறை எச்சரிக்கை

தமிழகத்தில் சட்டவிரோதமான முறையில் பெற்ற ஆதார் மற்றும் பாரத கடவுச்சீட்டுகளை (பாஸ்போர்ட்) வங்கதேசத்தினர் வைத்திருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, தமிழக காவல்துறை பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது என தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. மேற்கு வங்கத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்று கூறிக்கொண்டு பாரதத்தில் ஊடுருவிய வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் இவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதில் சிலர் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தனர். சிலர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற குற்றச் செயல்களில் ஈடுபட்டு பிடிபட்டனர்.

காவல் துறையின் கண்டுபிடிப்புகளின்படி, சட்டவிரோத வங்கதேச குடியேறிகளில் கணிசமானவர்கள் சமீப ஆண்டுகளாக தமிழகத்தில் குடியேறியுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் திருப்பூர், கோவை, ஈரோடு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் வசிக்கின்றனர். அவர்கள் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறிக்கொண்டு இங்குள்ள உள்ளூர் ஏஜெண்டுகள் உதவியுடன் இந்நகரங்களில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள், கட்டுமானம் மற்றும் பிற வணிகங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். வேலை கிடைத்த பிறகு, மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலிச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை போன்ற அடையாள ஆவணங்களைப் பெற்று, வங்கிக் கணக்குகளைத் திறக்கவும், பாரத பாஸ்போர்ட்டைப் பெற்றுள்ளனர். இந்த அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி அவர்கள் அரசின் உதவியையும் பெற்று வருகிறார்கள் என்று அஞ்சப்படுகிறது. சட்டவிரோதமாக குடியேறியவர்களில் பெரும்பாலோர் 20 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள். இந்த வெளிநாட்டவர்களில் பலர் பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல், போலி ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுதல், பாலியல் தொழில், திருட்டு, கொலை, கொள்ளை என குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவது தேசமெங்கும் ஏற்கனவே பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நமது நாட்டின்பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளனர்.

சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்கதேச சட்டவிரோத குடியேறிகளை காவல்துறையினர் அவர்களின் அதிகார வரம்பிற்குட்பட்ட இடங்களில் கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து நகரங்களின் ஆணையர்கள், கண்காணிப்பாளர்களுக்கு காவல்துறை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக மூத்த அதிகாரியை மேற்கோள் காட்டி தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக, கடந்த மாதம் கோவை விமான நிலையத்தில் வங்கதேசத்தை சேர்ந்த ஒருவர் குடியேற்ற அதிகாரிகளிடம் சிக்கினார். அவரிடம் பாரதத்தின் பாஸ்போர்ட் மற்றும் ஆதார் அட்டை இருந்தது. விசாரணையில், அவர் சட்டவிரோதமாக மேற்கு வங்கம் வழியாக பாரதத்துக்குள் நுழைந்து 2020 வரை தமிழகத்தில் தையல்காரராகப் பணிபுரிந்துள்ளார். இத்தகைய வங்கதேச பிரஜைகள், ரோஹிங்கியாக்கள், தங்களை நன்றாக மறைத்துக்கொள்வதற்காக முஸ்லிம்கள், வடமாநில மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் குடியேற விரும்புகிறார்கள் என்பது இதுபோன்ற சமீபத்திய சம்பவங்களிலிருந்து தெளிவாகிறது. தமிழக காவல்துறை இந்த கோணத்தில் பார்க்கிறதா என்பது தெரியவில்லை.