தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “தி.மு.க ஆட்சியில் தமிழகம் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ளது.துரதிர்ஷ்டவசமாக, தமிழக காவல்துறை மற்றும் மாநில உளவுத்துறை, கோபாலபுரம் குடும்பத்தின் அரசியல் எதிரிகளை சதி செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு, தங்கள் கடமைகளை மறந்துவிட்டனர்.கோயம்புத்தூர் தற்கொலை குண்டுவெடிப்புக்கு முன் கொடுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட எச்சரிக்கையை உதாசீனம் செய்து தூங்கியது தமிழக உளவுத்துறை. இலங்கையின் போதைப்பொருள் கடத்தல்காரன் முகமது இம்ரான், இந்தியாவுக்குள் நுழைவதைப் பற்றி மத்திய உளவுப் பிரிவினரிடம் இருந்து குறிப்பிடத்தக்க எச்சரிக்கையைப் பெற்ற போதிலும், தமிழக அரசின் உளவுத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. “கஞ்சிபானி” இம்ரான் இலங்கையில் ஜாமீனில் வெளியே வந்த பிறகு, கிறிஸ்மஸ் நேரத்தில் இந்தியாவிற்குள் நுழையலாம் என்று மத்திய உளவுத்துறை வெளியிட்ட எச்சரிக்கை பற்றிய கதையை “தி இந்து” பத்திரிக்கை வெளிப்படுத்தியது. தமிழக முதல்வர் தனது கடந்த கால தடுமாற்றங்களை தனக்குத்தானே தொடர்ந்து முறியடித்து வருகிறார். துரதிர்ஷ்டவசமாக, பேரழிவாகவும், தவறான நிர்வாகத்தின் பாடப்புத்தகமாகவும் தொடரும் இந்த திறனற்ற தி.மு.க ஆட்சியைத் தேர்ந்தெடுத்ததற்கு தமிழக மக்கள் விலை கொடுத்து வருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.