உத்தரவுகளை மீறும் தமிழக அரசு

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு வெளியே ஒரு கி.மீ சுற்றளவுக்கு குவாரிகளுக்கு அனுமதி கூடாது என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, “விஞ்ஞான ஊழலின் பிறப்பிடம் தி.மு.க. சுயநல நோக்கத்துடன் செயல்படும் தி.மு.க அரசு,தனது ஆட்சிக்காலம் முடிவடைவதற்கு முன்பு தமிழகத்தின் ஒட்டுமொத்த வளத்தையும் சூறையாடிவிட வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளதா என்ன? பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு வெளியே ஒரு கி.மீ சுற்றளவுக்கு குவாரிகள் இயங்க மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் தடை விதித்துள்ளதை தமிழக அரசு கடந்த 14ம் தேதி வெளியிட்டுள்ள அரசாணை மீறுவதாக உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் குவாரிகளிடம் இருந்து வசூல் வேட்டையை தொடங்க உருவாக்கப்பட்ட வழிமுறைதான் 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட அரசாணை. தடை விதித்தபின் அனைத்து குவாரி முதலாளிகளிடமும் வசூல் வேட்டை நடத்தியுள்ள தி.மு.க., தற்போது வசூல் முடிந்தவுடன் தாங்கள் பிறப்பித்த தடையை நீக்கி குவாரிகள் இயங்க அனுமதி வழங்கியுள்ளது. தற்போது பிறப்பிக்கப்பட்டு இருக்கும் அரசாணையை ரத்து செய்து, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு வெளியே ஒரு கி.மீ.சுற்றளவு வரை குவாரிகள் இயங்க அனுமதி மறுக்கப்பட வேண்டும் என்பது தமிழக பா.ஜ.கவின் கோரிக்கையாகும்” என கூறியுள்ளார்.