தமிழக சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று காலை தாக்கல் செய்யப்பட்டது. இது திமுக அரசின் 2வது முழுமையான பட்ஜெட். 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம் ஆகியன அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும். தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு இந்த உரிமைத் தொகை வழங்கப்படும். இதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கப்படுகிறது என்று நிதியமைச்சர் அறிவித்தார். திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அறிவிப்பான, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவது குறித்த அறிவிப்பு, பட்ஜெட்டில் இடம்பெறும் என முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். எனவே, இந்த பட்ஜெட்டில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவது உள்ளிட்ட புதிய அறிவிப்புகள் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில் உரிமைத் தொகைக்கான அறிவிப்பை நிதியமைச்சர் வெளியிட்டார்.