உலகைப் படைத்து காத்து அழிக்கும் சக்தியை பலவிதமாக வழிபடும் வேறுபட்ட சம்பிரதாயங்கள் இந்திய கலாச்சாரத்தில் உள்ளன. இந்த சக்தியையே ‘ப்ரக்ருதி’ என்று நம் சாஸ்திரங்கள் போற்றுகின்றன. ‘க்ருதி’ என்றால் படைப்பு. செய்யப்படுவது ‘க்ருதி’. க்ருதிக்கு முக்கியமானது ப்ரக்ருதி அதாவது இயற்கை. இயற்கையை அன்னையாகப் போற்றுகிறோம். இயற்கை அன்னையின் சக்தி உண்மையில் ஒன்றேயானாலும், அது அனேக வடிவங்களில் படைப்பில் காணப்படுகிறது. இந்த வெவ்வேறு சக்திகளே வெவ்வேறு தெய்வ வடிவங்கள். இயற்கையை ஜகன்மாதாவாக மந்திர தந்திரங்களால் யாக, யக்ஞங்களால் வழிபடும் முறைகளோடு மட்டுமின்றி அப்பாவித்தனமான, கள்ளம் கபடமற்ற பக்தியோடு, தங்களுக்குத் தெரிந்த மொழியில், தூய உள்ளத்துடன் வழிபடும் சம்பிரதாயங்களும் ஹிந்து மதத்தில் உள்ளன.
மனிதர்களில் காணப்படும் வேறுபாடுகளுக்கு தகுந்தாற்போல் இயற்கைச் சக்தியை வழிபட்டு தங்களுக்கு ஏற்ப அனுகூலப்படுத்திக் கொள்ளும் விதத்தில் ஒரு நெருக்கத்தையும் அருகாமையையும் நம் மூதாதையர் பரம்பரையாக அறிமுகப்படுத்தியுள்ளனர். அறிவு, பலம், செல்வம் இம்மூன்றும் அனைவருக்கும் தேவையானவையே. அறிவுத் தெய்வம் சரஸ்வதி, சக்தியளிப்பவள் துர்கா (காளி), செல்வத்திற்கு லட்சுமி. இம்மூவரும் ஒரே சக்தியின் மூன்று தோற்றங்கள். இவற்றைப் பெறுவதற்காக மூன்று சக்திகளும் ஒன்று சேர்ந்த ஆதிசக்தியாக வழிபடும் பண்டிகைகள் நம் கிராமங்களில் காணப்படுகின்றன.
கிராம தேவதைகளை மக்கள் தங்கள் மொழியில், தாம் அறிந்த வகையில் வழிபாடு செய்து கொள்ளும் சௌகரியம் நம் சனாதன தர்மத்தில் உள்ளது. சம்ஸ்கிருத மந்திர தந்திரங்கள் மட்டுமல்லாமல் தங்கள் இதயத்தின் கூக்குரலை தங்கள் வாழ்க்கையின் நடைமுறையுடன் இணைத்து கடவுளை வழிபடும் விசாலமான பார்வை நம் சனாதன தர்மத்தில் இயல்பாகவே உள்ளது என்பதற்கு கிராமிய பண்டிகைகளே சான்றுகள்.
சக்தி வழிபாடு சாதாரண கிராம மக்களால் அசாதாரண வைபவத்தோடு நடத்தப்பெறுகிறது. இயற்கையின் சக்தியை வீட்டு தேவதையாக, குடும்ப தெய்வமாக, குலதெய்வமாக, கிராம தேவதையாக அனைவருக்கும் ஏற்ப, வழிபடுவது ஓர் உன்னதமான நாகரீகம். கடவுளை ஒரு சிலருக்கு மட்டும் சொந்தமாக்காமல் அனைவருக்கும் கடவுள் சொந்தம் என்று நிரூபிக்கும் இந்தப் பண்டிகைகள், சமுதாயத்தில் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் வளர்க்கின்றன. இவை பண்பாட்டை பிரதிபலிக்கும் கண்ணாடியாக விளங்குகின்றன.
ஜகத் ஜனனிதான் கலை அம்சங்களுடன் கிராம தேவதைகளாக அவதரித்துக் கொள்கிறாள் என்று புராணங்கள் கூறுகின்றன. எந்த தேவி மூன்று சக்திகளும் ஒன்றானவளோ அந்த தேவியே இந்த கிராம தேவதைகளில் உருவத்தில் உள்ளாள்.
“யா யாஸ்ச க்ராம தேவ்ய: ஸ்யுஸ்தா: சர்வா:
ப்ரக்ருதே களா:”
-“ப்ரக்ருதியாகிய சக்தியின் அம்சங்களே கிராம தேவதைகள்” என்பது தேவீ பாகவதத்தின் கூற்று.
தேவதைகளின் அருளால் கிராமங்களில் எத்தகைய பெருந்துன்பங்களும் ஏற்படாமல் அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கின்றன.
அங்காளம்மா, மகம்மாயி, காத்தாயி, வீராயி… என்று நாம் வணங்கும் தேவதைகள் அனைவரும் வேத கலாசாரத்தின் தொடர்ச்சியான உருவங்களே. எல்லைகளில் கோவில் கொண்டு கிராமத்தையும் கிராம மக்களையும் காக்கும் அன்னையே இந்த தேவதைகள்.ஆடி மாதத்தில் இயற்கை சக்தியை அம்மன்களாக அலங்கரித்து வழிபட்டு அர்ச்சனை செய்வார்கள். யக்ஞ திரவியமான அன்னத்தை சமர்ப்பித்தல் என்பது இயற்கை சக்திகளின் ஆனந்தத்திற்கு காரணமாகிறது. ஆடி மாதத்தில் இயற்கையில் ஏற்படும் மாற்றங்களை தம் ஆயுள் ஆரோக்கிய சௌபாக்கியத்திற்கு உகந்ததாக ஆக்கித்தரவேண்டுமென்று இயற்கை அன்னையை வழிபடுவது இப்பூஜைகளின் உட்பொருள்.
இயற்கை அருளால்தான் நமக்கு உணவு கிடைக்கிறது. பயிர் விளைச்சல் மழை பொழிதல் போன்றவை அனைத்தும் இயற்கையின் அருள்மேல் ஆதாரப்பட்டுள்ளன. அவற்றினால் கிடைக்கும் உணவினை பக்தியோடு நிவேதனம் செய்வது நன்றி செலுத்துவதன் பொருட்டே! மீண்டும் அவற்றை பிரசாதமாக நமக்களித்து ஆசீர்வதிக்கிறாள் ஜகன்மாதா.தேவதைகள் பார்வையால் திருப்தியடைபவர்கள். அவர்களின் பார்வை பதார்த்தங்களின் மீது பட்டால் போதும். அவை சக்தி நிரம்பிய பிரசாதமாக மாறிவிடுகின்றன. எல்லா நிலையில் இருப்பவர்களுக்கும் ஏற்புடையவளாக உள்ள பராசக்தியின் அருளுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகள், கிராம தேவதைகளும் கிராமப் பண்டிகைகளும்.
கட்டுரையாளர் : ருஷிபீடம் தெலுங்கு பத்திரிகை ஆசிரியர்
தமிழில் : ராஜி ரகுநாதன்