ரூ.1,000 கோடி ஊழல் செய்த தாசில்தார் கைது

கர்நாடகாவில் ஊழல் செய்யும் அதிகாரிகளுக்கு, லோக் ஆயுக்தா சிம்ம சொப்பனமாக விளங்குகிறது. ஆனால், சித்தராமையா 2013 – 18ல் முதல்வராக இருந்த போது, லோக் ஆயுக்தாவின் பல்லை பிடுங்கி, லஞ்ச ஒழிப்பு படையிடம் அதிகாரத்தை வழங்கினார். கடந்த பா.ஜ., ஆட்சியின் போது, நீதிமன்ற உத்தரவால் லஞ்ச ஒழிப்பு படை ரத்து செய்யப்பட்டு, லோக் ஆயுக்தாவுக்கு மீண்டும் உயிரூட்டப்பட்டது. இதையடுத்து, முறைகேடாக சம்பாதித்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ள அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

இந்த வகையில், 14 மாவட்டங்களில், 15 ஊழல் அதிகாரிகளுக்கு சொந்தமான, 62 இடங்களில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக, பெங்களூரு கிழக்கு மண்டலத்தில் உள்ள கே.ஆர்.புரம் தாசில்தாராக இருக்கும் அஜித் ராய்க்கு, 45, சொந்தமான 11 இடங்களில் 50க்கும் அதிகமான அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனை நேற்றும் நீடித்தது. அப்போது, அஜித் ராய் தலா 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நான்கு பார்ச்சுனர் கார்கள், தலா, 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நான்கு தார் ஜீப்கள், 2.50 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு லாண்ட் க்ரூசர் கார் முறைகேடாக சம்பாதித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இத்துடன், கட்டு கட்டாக 40 லட்சம் ரூபாய்; 700 கிராம் தங்க நகைகள் உட்பட 1.90 கோடி ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் தேவனஹள்ளியில் 96 ஏக்கர் விவசாய நிலம்; 40 ஏக்கரில் பண்ணை வீடு என 136 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலம் ஆகியவற்றை வாங்கி குவித்துள்ளார். இவற்றின் மொத்த மதிப்பு 1,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, தாசில்தார் அஜித் ராயை லோக் ஆயுக்தா போலீசார், பெங்களூரில் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.