புதன்கிழமை இரவு 8.30 மணி அளவில் லடாக் யூனியன் பிரதேசத்தின் லே பகுதியில் உள்ள மகளிர் காவல் நிலையத்திற்கு லேயில் உள்ள எஸ்.என்.எம் மருத்துவமனையிலிருந்து அழைப்பு வந்தது. அதில் 12 வயதுடைய ஒரு சிறுமி, தலை, முகம் மற்றும் கைகளில் பலத்த காயங்களுடன் அவரது மாமாவால் அழைத்து வரப்பட்டுள்ளார். சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது” என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, லே பகுதி காவலர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை துவக்கப்பட்டது. அந்த சிறுமி, தான் லேயில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருவதாகவும், தனது கிராமத்தில் இருந்து லேவுக்கு தினமும், தனியாக பேருந்தில் பயணம் செய்வதாகவும் கூறினார். மேலும், புதன்கிழமை பள்ளி நேரம் முடிந்ததும், மாலை 4.30 மணியளவில், ஃபோடாங், ஜிவெட்சல் அருகே சென்றபோது, 52 வயதான சையத் சுல்பிகர் ஷா என்பவர், தான் ஓட்டிச் சென்ற சான்ட்ரோ காரில் சிறுமிக்கு லிப்ட் கொடுத்தார். அவர் சிறுமியை கிராமத்திற்குப் பதிலாக சூச்சோட்டில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்றார், அங்கு அவள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார். பின்னர் சிறுமியை, கற்களால் தாக்கி பாறைக் குழிக்குள் தள்ளிவிட்டு மண்ணையும் கல்லையும் போட்டு உயிருடன் மூடினான். இதனால், குழந்தைக்கு கடுமையான காயம் ரத்தப்போக்கு ஏற்பட்டது. எனினும், தப்பிப் பிழைத்து, தைரியத்துடன் குற்றம் நடந்த இடத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள சுச்சோட் பிரதான சாலையை நோக்கி நடந்து சென்றார். உடனடியாக உதவிக்காக அவரது வீட்டைத் தொடர்பு கொண்டார். இந்த விவரங்கள் அறிந்து துரித நடவடிக்கையில் இறங்கிய காவல்துறையினர், குற்றவாளி சுல்பிகர் ஷாவை கண்டுபிடிக்க சிறப்பு குழுக்களை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சிசிடிவி காட்சிகள் மற்றும் நுண்ணறிவுப்பிரிவு உதவியுடன், சம்பவம் நடந்த 48 மணி நேரத்திற்குள் அந்த கொடூர குற்றவாளியை கைது செய்தனர். பல சந்தர்ப்பங்களில் சையத் சுல்பிகர் அலி ஷா, அந்த சிறுமிக்கு லிஃப்ட் கொடுத்துள்ளார், சிறுமியை குறித்து தெரிந்துகொண்ட அவர், இந்த பாலியல் வன்கொடுமையை நிகழ்த்தி சிறுமியை உயிருடன் புதைக்க முயன்றுள்ளார் என கூடுதல் காவல்துறை இயக்குநர் எஸ்.எஸ். கந்தாரே தெரிவித்தார்.