கல்வியாளர், வழக்கறிஞர் அரசியல்வாதி என பன்முகததன்மை கொண்டவர் சியாமா பிரசாத் முகர்ஜி. மேற்கு வங்காளத்தில் சர் அசுதோசு முகர்சி, ஜோகமாயா தம்பதியருக்கு 6 ஜூலை 1901ல் பிறந்தார். இங்கிலாந்து சென்று சட்டம் பயின்று, பாரிஸ்டர் ஆனார். தனது 33வது வயதில் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தரானார். 1929ல் சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்தத் தேர்தலில் மேற்கு வங்க மாகாண சட்டமன்ற தேர்தலில் வென்று அம்மாநில நிதியமைச்சரானார்.
1937 – 1941 காலகட்டத்தில், எதிர்கட்சித் தலைவரானார். பின்னர் ஹிந்து மகாசபையில் இணைந்து அதன் தலைவராகவும் ஆனார். நேருவின் தலைமையிலான, சுதந்திர இந்தியாவின் வணிகம் மற்றும் தொழில் அமைச்சரானார். 1950ல் லியாகத்அலி – நேரு ஒப்பந்தம் சர்ச்சை காரணமாக பதவி விலகினார் முகர்ஜி.
அன்றைய ஆர்.எஸ்.எஸ் தலைவர் குருஜியுடன் கலந்துபேசி பாரதிய ஜனசங்கம் கட்சியை தோற்றுவித்து, அதன் முதல் அகில இந்தியத் தலைவரானார். 1952ல் நடந்த முதல் நாடாளுமன்ற தேர்தலில், பாரதிய ஜனசங்கம் சார்பில் வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்ற மூவரில் முகர்ஜியும் ஒருவர்.
ஜம்மு காஷ்மீர் மாநில அரசிற்கு தனிக் கொடி, தனிச் சின்னம், தனி பிரதமர் இருப்பதை முகர்ஜி கடுமையாக எதிர்த்தார். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 370ஐ நீக்கக் கோரி, முகர்ஜி தலைமையிலான பாரதிய ஜனசங்கம் சத்தியாகிரகப் போராட்டங்களில் ஈடுபட்டது.
காஷ்மீர் அரசின் அனுமதியின்றி அங்கு சென்ற முகர்ஜியை, அம்மாநில காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. அங்கு மர்மமான முறையில் ஜூன் 23 1953 அன்று மரணமடைந்தார் சியாமா பிரசாத் முகர்ஜி. அவரின் மரணம் குறித்து விசாரிக்க தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற முகர்ஜியின் தாயாரின் கோரிக்கையை நேரு ஏற்கவில்லை.
இதனால் முகர்ஜியின் மரணம் தொடர்பான சர்ச்சை இன்றுவரை தீரவில்லை. முகர்ஜியின் மரணம், நேருவின் சதித் திட்டம் என அடல் பிகாரி வாஜ்பாய் 2004ல் குறிப்பிட்டுள்ளார்.