ஸ்வர்னிம் விஜய் வர்ஷ்

சுதந்திரத்துக்கு பிறகு, தேசம் பிளவுபடுத்தப்பட்டபோது, பாகிஸ்தான் பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களையொட்டி ஒரு பகுதியும், மேற்கு வங்கத்தையொட்டி இன்னொரு பகுதி என இரண்டு பகுதிகள் உள்ளடக்கிய தேசமாக இருந்தது. மேற்கு வங்கத்தை ஒட்டிய பகுதி, கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்டது. பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தானியர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தினர். அங்கு இனப்படுகொலைகள், பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை, சொத்துக்கள் சூறையாடப்படுதல் என்று பாகிஸ்தான் அக்கிரமம் செய்தது.

இதை தடுக்க பாரதம் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. ஒரு கட்டத்தில் பாகிஸ்தான், பாரதத்தை போருக்கு அழைத்தது. நமது பகுதிகளை குண்டு வீசி தாக்கியது. இதனால் பாரதம் பாகிஸ்தானுடனான போரில் இறங்கியது. கிழக்கு பாகிஸ்தானில் இயங்கி வந்த முக்தி வாஹினி அமைப்பும் பாரதத்துடன் சேர்ந்துகொண்டு போரில் ஈடுபட்டது.

பாரதத்தின் அனைத்து படைகளும் கூட்டாக இணைந்து ராணுவத் தாக்குதல் நடத்தின. இதில், பாகிஸ்தானின் கஜினி, காஜி உள்ளிட்ட பல போர்க்கப்பல்கள், 94 போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டன. இது பாகிஸ்தானுக்கு பின்னடைவாக அமைந்தது. வேகமாக முன்னேறிய நமது தரைப்படை, பாகிஸ்தானின்15,000 சதுர கி.மீ நிலத்தை கைப்பற்றியது. டாக்கா நகரம் பாரத ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்தது. பாரத ராணுவத்தின் அதிரடி தாக்குதல்களால், பாகிஸ்தான் தோல்வி நிலைக்கு தள்ளப்பட்டது.

வேறு வழியின்றி, 16 டிசம்பர் 1971ல் பாகிஸ்தான் போரை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தது. பாகிஸ்தானின் 90,000 ராணுவ வீரர்களுடன் சரண் அடைந்தனர். புதிய நாடாக வங்கதேசம் உதயமானது.

பாகிஸ்தான் ராணுவம், பாரதத்திடம் சரணடைந்த 16 டிசம்பர், ‘விஜய் திவஸ்’ (வெற்றி தினம்) என்று கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வருடம் இந்த போர் வெற்றியின் 50வது வருடம் எனும் சிறப்பை பெறுவதால் ‘ஸ்வர்னிம் விஜய் வர்ஷ்’ என விஷேஷமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தேசம் முழுவதும் பல்வேறு சிரப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.