சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவை நாடு கொண்டாடி வரும் வேளையில் மத்திய அரசு, தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ’ஸ்வராஜ் – பாரத சுதந்திரப் போராட்டத்தின் விரிவான கதை’ என்ற பெயரில் புதிய வரலாற்று நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான முன்னோட்ட காட்சியை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர் டெல்லியில் வெளியிட்டார். 15ம் நூற்றாண்டு முதல் நடக்கும் பாரத சுதந்திரப் போராட்டத்தின் கதை 75 பகுதிகளாக ஒளிபரப்பாக உள்ளது. பிரபல திரைப்பட நடிகர் மனோஜ் ஜோஷி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த தொடர் பல வரலாற்று நிகழ்வுகளுக்கு உயிர் கொடுக்கும், மேலும், அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை விளக்கும் வகையில் இருக்கும். 2022 ஆகஸ்ட் 14ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ள இந்த தொடர், பல்வேறு மொழிகளில் அந்தந்த மண்டல தூர்தர்ஷன் அலைவரிசையில் ஒளிபரப்பாக உள்ளது. மேலும், இதன் ஒலி வடிவம் அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாக உள்ளது.