உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சுவாமி நாராயண் கோயில்களை நிர்வகிப்பதுடன் பல்வேறு ஆன்மீக, தொண்டு பணிகளையும் செயல்படுத்தி வரும் ஹிந்து ஆன்மிக அமைப்பான போச்சாசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா (பி.ஏ.பி.எஸ்) சுவாமி நாராயண் மந்திர் ஆலய நிர்வாகம், அமெரிக்காவில் புதிய ஆராய்ச்சி நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது. அகமதாபாத்தில் இருந்து இவ்விழாவில் கலந்து கொண்ட மஹந்த் சுவாமி மகராஜ், இதனை துவக்கிவைத்து உரையாற்றுகையில், ‘ இங்கு துவக்க நிகழ்ச்சியாக ஏற்றப்படும் விளக்கு, உலகம் முழுவதும் அறிவின் ஒளி பரவுவதைக் குறிக்கும். நியூஜெர்சியில் உள்ள ராபின்ஸ்வில்லியில் துவக்கப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சி நிறுவனம், சமஸ்கிருதம், வேதம், பாரம்பரிய இலக்கியங்கள், ஹிந்து நம்பிக்கைகள், நடைமுறைகள் ஆகியவற்றின் போதனைகள் மூலம், சமூக நல்லிணக்கம், மதங்களுக்கு இடையேயான ஒற்றுமை, பொது ஈடுபாடு, கல்விச் சொற்பொழிவு ஆகியவற்றை வளர்க்க பாடுபடும். சமஸ்கிருதத்தைக் கற்கவும், ஹிந்து மத நூல்களைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெறவும் உதவும். சமூகத்தின் உறுப்பினர்களிடம் பெருகி வரும் ஆர்வம் இந்த நிறுவனத்திற்கான உத்வேகமாக உள்ளது. மாணவர்கள் தங்கள் படிப்பில் சிறந்து விளங்கவும், சமுதாயத்திற்குச் சேவை செய்வதற்காக ஒன்றிணைந்து பணியாற்றவும், உலகம் முழுவதும் ஒற்றுமை வட்டத்தை விரிவுபடுத்தவும் ‘வசுதைவ குடும்பகம்’ என்ற உணர்வில், உலகனைத்தும் ஒரே குடும்பம் என்ற உலகளாவிய நல்லிணக்கத்தின் வட்டத்தை விரிவுபடுத்தவும் நாம் முயற்சிப்போம் ”என்று கூறினார். ஹிந்து தத்துவம் மற்றும் சமஸ்கிருதத்தின் உலகின் முன்னணி அறிஞர்களில் ஒருவரும், சமஸ்கிருத வர்ணனை மற்றும் தத்துவ நூல்களின் ஆசிரியருமான மஹாமஹோபாத்யாய பூஜ்ய பத்ரேஷ்தாஸ் சுவாமிகள் தொடக்க விழாவிற்கு தலைமை தாங்கினார். 50க்கும் மேற்பட்ட ஹிந்து ஆலயங்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த 115க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும் பல்வேறு அறிஞர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.