மத்தியப் பிரதேசம் இந்தூரைச் சேர்ந்த பா.ஜ.க தலைவர் தீபக் ஜெயின், கடந்த புதன்கிழமையன்று இரண்டு திரையரங்குகளை முன்பதிவு செய்து நூற்றுக்கணக்கான ‘சாதுக்களுடன்’ சென்று ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்தைப் பார்த்தார். படத்தைப் பார்த்த மகாமண்டலேஷ்வர் ராதே ராதே பாபா, ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “காஷ்மீர் காஷ்யபரின் பூமி, சங்கராச்சாரியார் வழிபட்ட தேசம். வேத காலத்தில் காஷ்மீர் அதன் பண்டிதர்களால் புகழ்பெற்றிருந்தது. அந்த வேத மரபுகளை அழிக்க, கொடூரமான குற்றங்கள் செய்யப்பட்டன. காஷ்மீரி பண்டிட்கள் மோசமாக நடத்தப்பட்டனர். இந்த உண்மைகளை புதிய தலைமுறை அறிந்திருக்க வேண்டும். மாணவர்களுக்கான சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். மத்திய மாநில அரசு பள்ளி பாடத்திட்டங்களில் இதனை சேர்க்க வேண்டும். காஷ்மீரில் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்ததற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். மேலும், ஜம்மு காஷ்மீரில் சாதுக்களுக்கும் துறவிகளுக்கும் நிலத்தை ஒதுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதனால் அங்கு நாம் வேத மரபுகளை மீண்டும் நிலைநாட்ட முடியும். 2014க்குப் பிறகு, நம் தேசம் மாறி வருகிறது. பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர்களின் சிந்தனை செயல்முறையும் மாறுகிறது. இப்போது பல தேசபக்தி படங்கள் உருவாகின்றன. முன்பு நிலைமை அதுபோல இல்லை’ என்று கூறினார்.