மகாராஷ்ட்ர அரசியலில் திடீர் திருப்பமாக பாஜக, சிவசேனை கூட்டணியில் அஜீத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிளவுபட்ட அமைப்பு கூட்டணி அரசில் பங்கேற்றுள்ளது. அதன் 8 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
இது தொடர்பாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரஃபுல் படேல் மும்பையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாடு துரித வளர்ச்சி கண்டு வருகிறது. பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் என்ன நடந்தது என்பது நன்றாகத் தெரியும். முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸை யார் வழிநடத்துகிறார் என்பதே இன்னும் முடிவாகவில்லை.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-க்கள் தெரிவித்த பெரும்பான்மை கருத்தின் அடிப்படையிலேயே மாநில அரசுக்கு ஆதரவளிக்க முடிவெடுக்கப்பட்டது. மாநிலத்தின் வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சி, பிரதமர் மோடியின் தலைமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அந்த முடிவெடுக்கப்பட்டது.
நாகாலாந்தில் ஏற்கெனவே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தெரிவித்திருந்தது. தற்போது மகாராஷ்டிரத்திலும் ஆதரவு தெரிவிக்கிறோம். மாநிலத்தின் வளர்ச்சியை முன்னிறுத்தியும், அரசியல் நிலைத்தன்மையை ஏற்படுத்தவுமே அரசுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் 53 எம்எல்ஏ-க்களும் எங்கள் பக்கமே உள்ளனர்.
சிவசேனை கட்சியுடன் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. அப்படியிருக்கையில் பாஜகவுடனும் கூட்டணி அமைப்பதில் எந்தத் தவறும் இல்லை. எங்கள் மீது எந்தவித அழுத்தமும் இல்லை. தேசியவாத காங்கிரஸ் கட்சி எனக்கு வழங்கிய பொறுப்புகளுக்காக கட்சிக்கும் அதன் தலைவர் சரத் பவாருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இன்று (திங்கள்கிழமை) குருபூர்ணிமா; குருவுக்கு வந்தனம் தெரிவிக்க வேண்டிய நாளாகும். எங்களது குருவான சரத் பவாருக்கு வந்தனம் தெரிவிக்கிறோம்’’ என்றார்.