கடந்தாண்டு, டிசம்பர் 1 அன்று, தெற்கு மும்பையில் உள்ள ஒய்.பி சவான் ஆடிட்டோரியத்தில் ஒரு பொது விழாவில் மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி கலந்து கொண்டார். அதன் முடிவில், அமர்ந்த நிலையிலேயே நிலையில் தேசிய கீதத்தைப் அவர் பாடத் தொடங்கினார், பின்னர், எழுந்து நின்று மேலும் இரண்டு வரிகளைப் பாடினார். முறையாக முழுவதுமாக பாடாமல் நிறுத்திவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினார். இது தேசிய கீதர்த்தை அவமதிக்கும் செயல். 1971ம் ஆண்டு தேசிய மரியாதையை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டத்தின் பிரிவு 3ன் கீழ் இக்குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில், மும்பை பா.ஜ.க செயலாளர் வழக்கறிஞர் விவேகானந்த குப்தா, மும்பை மஸ்கானில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்நிகழ்வு அரசாங்க விழாவோ அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியோ அல்ல. அவர் முதல்வராக இருந்தாலும், அவர் தனது அதிகாரப்பூர்வ பணிகளைச் செய்யவில்லை, அவர் மீது நடவடிக்கை எடுக்க எந்த முன் அனுமதியும் தேவையில்லை, வழக்குப் பதிய எந்தத் தடையும் இல்லை என்று தீர்ப்பளித்தார். இதனையடுத்து, தேசிய கீதத்தை அவமதித்ததாக மமதா பானர்ஜிக்கு மும்பை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.