டெல்லி மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் மற்றும் சட்டமேலவை உறுப்பினரான கவிதா இன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் 12ம் தேதி, ஹைதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கவிதாவின் வீட்டுக்கு டெல்லியில் இருந்து சென்றிருந்த சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த சூழலில் தான், அமலாக்கத்துறை அவரை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளது. இதுகுறித்து கவிதா வெளியிடுள்ள அறிக்கையில், “மகளிர் இட ஒத்துக்கீடு மசோதா நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. அந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக, பாரத் ஜாக்ருதி, எதிர்கட்சியினருடன் இணைந்து, 10ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் மௌன விரத போராட்டம் நடத்த உள்ளது. இந்தச் சூழலில் தான் அமலாக்கத்துறை எனக்கு சம்மனை அனுப்பியுள்ளது. நான் சட்டத்தை மதிக்கிறேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன். விசாரணையில் கலந்து கொள்வது தொடர்பாக சட்ட வல்லுநர்களிடம் ஆலோசிப்பேன். முதல்வர் கே.சி.ஆரின் போராட்டம் மற்றும் மத்திய அரசிற்கு எதிரான குரல், பி.ஆர்.எஸ் கட்சியின் நடவடிக்கைகள் அடக்க நினைக்கும் இதுபோன்ற செயல்களுக்கு ஒரு போதும் அடிபணிய மாட்டோம். எங்களின் போராட்டத்தைத் தொடர்வோம்” என தெரிவித்துள்ளார்.