விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் மதுரையில் துறவியர் மாநாடு நடைபெற்றது. அதன் முடிவில் மாபெரும் பொதுகூட்டம் நடந்தது. அதில் பல்வேறு துறவிகள், ஆதீனங்கள் கலந்துகொண்டு பேசினர். மாநாட்டின் முடிவில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் சில:
மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் பேசுகையில்,”ஆதீனங்கள் அரசியல் பேசாமல் வேறு யார் பேசுவது, அரசியல்வாதிகளுக்கு கோயிலில் என்ன வேலை. இறைவன் துஷ்ட தேவதை என்பவர்களுக்கு உண்டியல் மட்டும் இஷ்ட தேவதையா? அறநிலைய துறையை நீக்கி விட்டு கோயில்களை நீதிபதி தலைமையில் எங்கள் வசம் ஒப்படையுங்கள். இலங்கையில் கோயில்களை இடித்ததால் ராஜபக்சே இருக்கும் இடம் தெரியவில்லை. தமிழகத்திலும் கோயில்கள் இடிக்கப்படுகின்றன. கோயில்களில் கையை வைக்காதீா்கள் என் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன். கோயில்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதற்கு அரசும், அரசியல் தலையீடும் தான் காரணம். ஹிந்துக்களிடம் ஒற்றுமை ஏற்பட்டால் தான் கோயில்களை மீட்டெடுக்க முடியும்” என்றார்.
பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், ‘ஹிந்து சமயம் பெரும்பான்மை மக்களின் சமயமாக உள்ளது. ஆனாலும் இங்கு ஹிந்து சமயம் இங்கு புறக்கணிக்கப்படுகிறது. கட்டாய மதமாற்றம் உலகத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இதனால் கட்டாய மதமாற்றத்தை தடுக்க வேண்டியது மிகவும் அவசியம். தாய் மதம் திரும்பும் ஹிந்துக்களுக்கு உரிய உதவிகளை ஹிந்து சமய அறநிலையத்துறை செய்ய வேண்டும். அதேநேரத்தில் மதமாற்றத்துக்கு காரணமாக கூறப்படும் சமூக ஏற்ற தாழ்வுகள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்” என்றார்.
கோவை சிவலிங்கேஸ்வர சுவாமிகள், ”இது ஹிந்து நாடு. ஆனால் மற்ற மதத்தினருக்கு எதிரான நாடல்ல. அப்படி இருந்தும் சுவாமி நடராஜரை இழிவாக பேசுகின்றனர். கோயிலுக்குள் இருக்க வேண்டிய குருமகா சன்னிதானங்கள் ஹிந்து மதத்தை காக்க சாலைகளில் அலைகின்றனர்,” என்றார்.
மன்னார்குடி செண்டலங்கார ராமானுஜ ஜீயர், ”இனி யார் ஹிந்து மதத்திற்கு எதிராக பேசினாலும் அவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்,” என்றார்.
சின்மயா மிஷன் சிவயோகானந்தா, ”விவேகானந்தருக்கு பின் சுவாமி சின்மயா நந்தா வீரத் துறவியாக திகழ்ந்தார். வேள்வி தாய் என போற்றப்படும் பசு இல்லை என்றால் உணவு இல்லை. அதனால், தமிழகத்தில் பசுவதை தடை சட்டம் அவசியம்” என்றார்.
வி.ஹெச்.பி அமைப்பின் அகில உலக பொதுச் செயலாளர் மிலிந்த் பராண்டே, ‘லவ் ஜிஹாத் போன்ற கட்டாய மதமாற்ற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த ஹிந்துக்கள் ஒன்றிணைய வேண்டும். வேற்றுமத அமைப்பு ஹிந்து மதத்திற்கு கேடு விளைவிக்கிறது. கேரளாவில் ஒரு மத அமைப்பின் கூட்டத்தில், ‘ஹிந்துக்களே சாக தயாராக இருங்கள்’ என்ற கோஷம் எழுப்பியது. ’10 ஆண்டுகளில் 1.2 கோடி இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சி அளிப்போம்’ என, அந்த அமைப்பினர் கூறுகின்றனர். ஹிந்து மதம் அழிக்கப்படுவதை பார்த்து இறைவன் முருகன், பெருமாள், ஈசன் அஞ்ச மாட்டார்கள். அவர்கள் கையிலும் ஆயுதங்கள் இருப்பதை மறந்து விடாதீர்கள். ஹிந்து கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு உள்ளிட்டவற்றை பாடதிட்டத்தில் கொண்டு வர வேண்டும். ஜூன் 1,12களில் ஹரித்துவாரில் அகில இந்திய துறவியர் மாநாடு நடைபெறுகிறது’ என்றார்.
வி.எச்.பி., இணை பொதுச் செயலாளர் ஸ்தாணுமாலயன், ”ராமர் பாலம் இடிக்க இங்கு அடிக்கல் நாட்டினர். அதற்கு எதிராக வி.ஹெச்.பி போராட்டம் நடத்தி அதை கைவிட வைத்தது. ஹிந்துக்கள் விழித்தெழ வேண்டும். கிருஷ்ண பகவான் அதர்மத்தை அழிப்பார். கி.மு., கி.பி., எல்லாம் நமக்கு கிருஷ்ணர் பிறப்புக்கு ‘முன் பின் தான்” என்றார்.
சிதைந்து வரும் புராதன கோயில்களை பழமை மாறாமல் புதுப்பிக்க அரசியல் சாராத குழு அமைக்க வேண்டும். கோயில்களுக்கு பக்தர்கள் தரும் காணிக்கை உள்ளிட்ட நிதி ஆதாரங்களை பொதுப் பயன்பாடு என்ற போர்வையில் அரசு கையாள்வதை தவிர்க்க வேண்டும். கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மதமாற்ற தடை சட்டம் கொண்டுவர வேண்டும். சமய மைஅப்புகளும் சமுதாய அமைப்புகளும் சமுதாய நல்லிணக்கம் பேண நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் நிதி குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.