கோயில் நிலங்கள் அறிக்கை தாக்கல்

வழக்கறிஞர் ஜெகந்நாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வடபழனி முருகன் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் போன்றவற்றுக்கு சொந்தமான பல நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. எனவே, தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அவற்றை முறையாக அளந்து அந்த ஆவனங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். கோயில் நிலங்களை தனியார் பெயரில் மோசடியாக பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை ரத்து செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்யநாதன், ஆர். கலைமதி ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரர் குறிப்பி்ட்டுள்ள கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, நிலங்களை அளந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். பின்னர், இந்த வழக்கு விசாரணையை கோயில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றியதுடன் அடுத்த விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.