நேற்று மறைந்த ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் சுப்பராவ்ஜியின் 5வது ஆண்டு நினைவு நாள் என்று ஃபேஸ்புக் நினைவுகளில் காட்டியது. (அவர் மறைந்தது நள்ளிரவு 2 மணி)
*** 1962ல் கோவா விடுதலைக்காக சத்தியாகிரகம் செய்ய நாடு முழுவதுமுள்ள ஸ்வயம்சேவகர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் தலைமை அழைப்பு விடுத்தபோது, தமிழகத்திலிருந்து சென்ற சத்தியாகிரகிகளுள் சுப்பராவ்ஜி முதன்மையானவர். அதற்காக நுங்கம்பாக்கம் அரசுப் பள்ளியில் பார்த்து வந்த வேலையை ராஜிநாமா செய்துவிட்டு கோவா புறப்பட்டவர். சத்தியாகிரகத்தில் போர்ச்சுகல் போலீஸாரின் தடியடிகளைத் தாங்கியவர். கோவா விடுதலை பெற்ற அதே டிசம்பர் 19ம் தேதியன்று 2017ல் சுப்பராவ்ஜி மறைந்தார்.
*** திட்டமிட்ட வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். சுவாரசியமான நிகழ்ச்சிகளை நடத்துவதில் வல்லவர். துர்வாசரைப் போன்ற அதீத கோபக்காரரும் கூட.
2000-21ம் ஆண்டில் திருவண்ணாமலை ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் சி.ராஜசேகர்ஜிக்கு பல வண்ண ஸ்கெட்ச் பேனாக்களில் ஒரு அஞ்சல் அட்டை வந்திருந்தது. பள்ளி மாணவனான எனக்கு அந்த அட்டையில் இருந்த வாசகம் சுவாரசியமாகத் தென்பட்டது. “சுப்பன் வெட்கப்படுகிறான். சுப்பன் வேதனைப்படுகிறான். சுப்பன் தலைகுனிகிறான்” என்பதுதான் அந்த வாசகம். சி.ராஜசேகர்ஜியிடம் ஆச்சரியத்துடன் “யார் இவர்?” என்று கேட்டேன். “சங்கத்தின் மூத்த பிரச்சாரகர். அவர் தயாரித்துக் கொடுத்திருந்த நாட்குறிப்பு ஒன்றில் கிழமை தவறாகிவிட்டதாம். அதற்காக இந்தக் கடிதம்” என்றார். வியப்பாக இருந்தது.
*** சென்னைக்கு வரும்போதெல்லாம் சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ் காரியாலயத்தில் சுப்பராவ்ஜியைப் பார்ப்பேன். “சுப்பராவ் சொல்றான்” என்று தன்னை மூன்றாவது நபர் போல்தான் பேசுவார். அந்த நேரத்தில் இரவுப் பயணமென்றால் ரொம்ப பிடிக்கும். குறிப்பாக, இரவு 12 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு அதிகாலை 5 மணிக்கு வந்து, இரவு 12 மணிக்குள் மீண்டும் பேருந்து ஏறுவேன். இதை சுப்பராவ்ஜி கவனித்தார். என்னிடன் காரணம் கேட்க, “நேரம் மிச்சமாகுதுஜி” என்றேன் பெருமிதத்துடன். “இரவு பயணம் ஆரோக்கியமற்றது. அந்த நேரத்தில் அவசரம் இல்லாமல் பயணம் செய்யக்கூடாது. அப்படியும் நீ பயணம் செய்தால் நீ அயோக்கியன்; முட்டாள்” என்றார் கண்டிப்புடன். ஆனால், அந்த நேரத்தில் புரியவில்லை. இன்று புரிகிறது.
*** திருவண்ணாமலைக்கு வந்து மூன்று நாட்கள் தங்கியிருந்தார். அவரை மீண்டும் ரயில் ஏற்றிவிட போனோம். அப்போது ரயில் நிலையம் கேட்பாரற்று கிடந்தது. ஓரிரண்டு ரயில்கள் வந்தால் அதிசயம். அவருடன் வந்திருந்த காஞ்சிபுரம் ராமகிருஷ்ணன்ஜியிடம், ரயிலேற்றி விட வந்த எங்கள் மூன்று பேருக்கும் நடைமேடை சீட்டு எடுக்கச் சொன்னார். “இந்த ஊரில் யாரும் நடைமேடை சீட்டு எடுத்து பழக்கமில்லை. சங்கப் பணத்தை வீணடிக்க வேண்டாம்” என்று தடுத்தேன். “இந்த வழியில் ஆயிரம் பேர் போறான். உன்னை மட்டும் யார் ஆர்.எஸ்.எஸ் ஷாகா வரச் சொன்னது? அது போலதான் இதுவம். யார் மதிக்காவிட்டாலும் நாம் சட்டத்தை மதிக்க வேண்டும்” என்றார் கோபத்துடன்.
*** சேத்துப்பட்டு காரியாலயத்தில் நானும் மறைந்த ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் (கிசான் சங்க) கோபிஜியும் பேசிக் கொண்டிருந்தபோது, “சுப்பாராவ்ஜி” என்று ஏதோ சொல்ல வந்தேன். “இதோ பார் சுப்பாராவ்ஜிக்கு ஒரு கால் கிடையாது. வேண்டுமென்றால் கேட்டு பாரு” என்றார் கோபிஜி. “அவர்தான் நன்றாக நடக்கிறாரே?” என்றேன். “அவரிடமே நான் சொன்னேன் என்று கேளேன்” என்றான் குறும்புடன். சுப்பராவ்ஜி நாங்கள் பேசிக் கொண்டிருந்த இடத்துக்கு வந்தபோது தயங்கியபடியே கேட்டேன். அவர் சிரித்தபடியே, “ஆமாம். சுப்பராவுக்கு ஒத்தை கால்தான். சுப்பாராவ் கிடையாது” என்று புரிய வைத்தார்.
*** முகவரி, அடையாளம் போன்றவற்றை நுணுக்கமாக கவனிப்பார். “திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்து இடது பக்கம் போனால் முத்து விநாயகர் கோயில் தெரு. அங்கே நாலாவது வீட்டின் முன் புளியமரம் இருக்கும். அதைத்தான் ரெண்டாவது சிவப்பு கலர் பில்டிங்” என்று சொல்வார். முத்து விநாயகர் கோயில் தெரு வழியாக தினசரி செல்பவர்களுக்குக் கூட அந்தப் புளியமரம் தெரிந்திருக்காது. சுப்பராவ்ஜியின் கண்களில் தவறாமல் பட்டிருக்கும்.
அதே போல, 40, 50 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமானவர்களாக இருந்தாலும் சுப்பராவ்ஜியின் தொடர்பு பட்டியலில் இருப்பார்.
*** தூயத்தமிழில் பேசுவார். சோப்புக்கு நுரை கட்டி, பவுடருக்கு நுரைப்பான். அவருடன் பழகுபவர்களுக்கும் அந்த வார்த்தைகள் இயல்பாகத் தொற்றிக் கொள்ளும்.
*** சுப்பராவ்ஜி கணக்கு ஆசிரியராக இருந்தவர். சுவாரசியமான புதிர்களைப் போடுவதில் வல்லவர். அதனால் எப்போதும் மாணவர்களின் கூட்டம் அவரைச் சுற்றியிருக்கும் அல்லது அந்தப் புதிர்களைக் கற்றுக்கொள்ள யாராவது பிரச்சாரகரோ அல்லது கார்யகர்த்தரோ வந்திருப்பார்கள்.
*** கணக்கு பராமரிப்பதிலும் வல்லவர். பயணம், உணவு வகைகள், (சோப்பு, பவுடர் போன்ற) தனிப்பட்ட செலவுகள் ஒவ்வொன்றுக்கும் திட்டமிடுவார். அதற்கான தொகையை அந்தந்த கவர்களுக்குள் பத்திரமாக வைத்திருப்பார். எங்களை ரயில் முன்பதிவுக்கோ அல்லது கடைக்கோ அனுப்பும்போது சரியான சில்லறைகளைத் தந்து அனுப்புவார்.
– சந்திர. பிரவீண்குமார்