மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு

மகாராஷ்டிரா அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தங்கள் ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளதால் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று மாலை 5 மணிக்குள் நிரூபிக்குமாறு மாநில ஆளுநர் பி.எஸ் கோஷியாரி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து சட்டப்பேரவை செயலருக்கு ஆளுநர் எழுதியுள்ள கடிதத்தில், ‘ஊடகங்களின் வாயிலாக, சிவசேனா கட்சியின் 39 எம்எல்ஏ.,க்கள் மஹா விகாஸ் கூட்டணியில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளனர் என்பதை அறிந்தேன். மாநில அரசு சுமுகமாக அனைவரின் நம்பிக்கையையும் பெற்று இயங்க வேண்டுமென்றால் அதற்கு முதல்வர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அதேபோல், சில கடுமையான அறிக்கைகள் என் கவனத்திற்கு வந்ததால், சட்டப்பேரவையின் வெளியேயும், உள்ளேயும் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் மனு: ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளதற்கு எதிராக சிவசேனா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 16 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது; ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆணை பிறப்பித்துள்ளது சட்டவிரோதமானது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பேட்டி: “நாங்கள் விரைவில் மும்பை சென்று, ஆளுநரை சந்தித்துப் பேசவுள்ளோம். யாருக்கும் சந்தேகம் வேண்டாம். என்னுடன் வந்துள்ள 50 எம்.எல்.ஏ.க்களும், தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் வந்துள்ளனர், மகிழ்ச்சியாக உள்ளனர். நாங்கள் ஒரு குறிக்கோளுடன் வந்துள்ளோம். சுயநலத்துக்காக வரவில்லை. ஹிந்துத்துவா மற்றும் பாலசாகிப் கொள்கையுடன் நாங்கள் வந்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.