பொதுமக்களின் விருப்பப் பானங்களாக காபியும் தேநீரும் உள்ளன. காபி, தேநீர் நுகர்வு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. பலர், எங்களால் உணவு சாப்பிடாமல்கூட இருந்துவிட முடியும் ஆனால் காபி அல்லது தேநீரை அருந்தாமல் இருக்க முடியாது என்று கூறுகிறார்கள்.
தேயிலைகளில் பல்வேறு வகைகள் உள்ளன. இதைப்போல காபியிலும் சில ரகங்கள் உள்ளன. பொதுவாக அரேபிகா, ரொபஸ்டா ஆகிய இரண்டு காபி ரகங்களே பிரசித்தி பெற்றுள்ளன. இவ்விரண்டில் அரேபிகா காபிதான் நுகர்வோரின் கண்ணோட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அரேபிகா காபியை விட ரொபஸ்டா காபியை ஒரு படி குறைவானதாகவே பெரும்பாலானோர் கருதுகின்றனர். எனினும் இன்ஸ்டன்ட் காபிக்கு உருதுணையாக இருப்பது ரொபஸ்டா ரகம்தான்.
டிகிரி காபி, பில்டர் காபி உள்ளிட்ட வார்த்தைகளும் நுகர்வோரிடையே புலங்கி வருகின்றன. பால் சேர்க்காத காபியை அருந்துவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பொதுவாக காபியையும் தேநீரையும் சுடச்சுட பருகுவதுதான் இயல்பு என்று கருதப்படுகிறது. ஆனால் அண்மைக் காலமாக கோல்டு காபி, கோல்டு டீ உள்ளிட்டவையும் வரவேற்பை பெற்று வருகின்றன. காபி எஸ்டேட், டீ எஸ்டேட் உள்ளிட்டவை மலைப்பகுதிகளில்தான் உள்ளன. தமிழ்நாட்டில் கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு உள்ளிட்ட இடங்களில் இந்த எஸ்டேட்டுகள் காணப்படுகின்றன.
ரொபஸ்டா, அரேபிகா ஆகிய ரகங்களைக் காட்டிலும் தரத்திலும் சுவையிலும் வாசனையி லும் சிறப்பானது என்று ஸ்டெனோபில்லா காபி கருதப்படுகிறது. ஆனால், துர திருஷ்டவசமாக இந்த ஸ்டெனோபில்லா காபி ரகம் படிப்படியாக அருகிவிட்டது. குறிப்பாக பிரெஞ்சுக்காரர்களுக்கு மிகவும் பிடித்தமானது ஸ்டெனோபில்லா காபிதான். கினியா, சியராலியோன், ஐவரிகோஸ்ட் ஆகிய நாடுகளில் ஸ்டெனோபில்லா காபி கணிசமாக உற்பத்தி செய்யப்பட்டது. 20ம் நூற்றாண்டின் இடைப்பட்ட பகுதியில் இந்த காபி ரகம் ஏறத்தாழ வழக்கொழிந்துவிட்டது.
இந்நிலையில், 2018ம் ஆண்டு சியராலியோனில் ஸ்டெனோபில்லா காபி ரகம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு புத்துயிர் ஊட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் சுமார் பத்து கோடி விவசாயிகள் காபியை விளைவித்து வருகிறார்கள். இதில் குறைந்தபட்சம் பத்து லட்சம் விவசாயிகளையாவது முதற்கட்டமாக ஸ்டெனோபில்லா காபி விளைவிக்க வைக்கவேண்டும் என்று முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
ரொபஸ்டா, அரேபிகா, காபி ரகங்களை குளிர் மிகுந்த மலைப்பகுதிகளில்தான் விளைவிக்க முடியும். ஆனால் குளிரற்ற பகுதிகளிலும் ஸ்டெனோபில்லா காபியை விளைவிக்க முடியும் என்பதை அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. 24.09 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை உள்ள இடங்களிலும் ஸ்டெனோபில்லா காபியை வளர்க்கமுடியும். இதை வரப்பிரசாதமாக எடுத்துக்கொண்டு இந்தியாவிலும் ஸ்டெனோபில்லா காபி சாகுபடிக்கு ஊக்கம் அளித்தால் அதிக மகசூல் எடுக்க முடியும் என்பது திண்ணம்.