கடந்த பல வருடங்களாக அமெரிக்க துருப்புக்களுக்காக மொழிபெயர்பாளர், அலுவலக பணியாளர்களாக பணியாற்றிவந்த சுமார் 18 ஆயிரம் பேர் தற்போது தலிபான்களால் கொல்லப்படும் ஆபத்தில் உள்ளனர். சமீபத்தில் மொழிபெயர்பாளராக பணியோயாற்றிய சோஹைல் பார்டிஸ் தலிபான்களால் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். உங்கள் நண்பர்கள் வெளியேறிவிட்டனர். இனி நாங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கொல்வோம் என பலரும் கொலை மிரட்டல்களை எதிர்கொண்டுள்ளனர்.
இவர்கள் தற்போது அமெரிக்காவில் புகலிடம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அதற்காக, அமெரிக்க ராணுவம், (Operation Allies Refuge) ஆபரேஷன் நட்புப் புகலிடம் எனும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்காக அவர்களிடம் உண்மை கண்டறியும் ‘பாலிகிராப்’ சோதனை நடத்தப்படுகிறது. ஆனால் இதில் பலரும் தேர்வு பெறவில்லை. தகுதியடைவோர் வர்ஜீனியாவில் முதல்கட்டமாகத் தங்க வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு முதல் 300 ஆப்கானிய மொழிபெயர்ப்பாளர்கள் தலிபான்களால் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்கர்களுடன் இணைந்து பணியாற்றியவர்களை கொல்லமாட்டோம் என அறிவித்த தலிபான்கள் அதனை தற்போது மீறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.