சேலம் மாவட்டம், வாழப்பாடி பேருந்து நிலையம் அருகில் கத்தோலிக்க கிறித்துவர்களின் சர்ச் அமைந்துள்ளது. இந்த சர்ச்சின் வளாகத்தில் மூன்று அடுக்கு வணிகக் கட்டடம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 8 அடி உயர ஏசு சிலையை சனிக்கிழமை நிறுவியது அதன் நிர்வாகம். இந்த சிலை உரிய அனுமதியின்றி வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளதால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கூறி சேலம் கிழக்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் மணிகண்டன் தலைமையில் பா.ஜ.கவினர் சர்ச் வாசலில் போராட்டம் நடத்தினர். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த வாழப்பாடி காவல்துறையினர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் பா.ஜ.க நிர்வாகிகளுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்தினர். வணிக கட்டத்தின் மீது இருந்த ஏசு சிலை மூடி மறைக்கப்பட்டது. இதன் பின்னர் பாஜகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.