ஸ்டாலின் பேச்சும் யதார்த்தமும்

சென்னை மாதவரத்தில் நடந்த அரசு ஊழியர் சங்கத்தின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், ‘அரசுக்கு வர வேண்டியதில் சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய அரசு பறித்து விட்டது. அரசின் கஜானாவை நாம்தான் நிரப்ப வேண்டும். மாநிலங்களை கொத்தடிமைபோல கையேந்த வைக்கிறது மத்திய அரசு என புலம்பியுள்ளார். தமிழகத்திற்கு சுமார் 5 லட்சம் கோடி கடன் உள்ளது. நிதிநிலைமை சீரானதும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்’ என கூறி, அரசு ஊழியர்களின் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உட்பட அனைத்து கோரிக்கைகளையும் குழிதோண்டி புதைத்துவிட்டார்.

தமிழக அரசின் வருவாய் கடந்த 2016 – 17 நிதியாண்டில் 1.64 லட்சம் கோடி, அடுத்த நிதியாண்டுகளில் அது 1.75 லட்சம் கோடி, 1.81 லட்சம் கோடி, 1.97 லட்சம் கோடி, 2020 – 21 நிதியாண்டில் 2.19 லட்சம் கோடி என உயர்ந்துள்ளது. கொரோனா சூழலிலும் தமிழகம் வளர்ந்து உள்ளதையே இது காட்டுகிறது. இதே காலகட்டத்தில் தமிழகக் கடன் 2.52 லட்சம் கோடியில் இருந்து படிப்படியாக உயர்ந்து தற்போது 5 லட்சம் கோடியாகிவிட்டது. இதற்கு எல்லாம் யார் காரணம்?

ஆளத்தெரியாத திராவிட கட்சிகளா அல்லது, மத்திய அரசா? இது குறித்துத் தெரிந்துதானே ஆட்சிக்கு வந்தார் ஸ்டாலின்? தி.மு.க பதவியேற்ற பிறகு புதிதாக பல்லாயிரம் கோடிகள் கடன் வாங்கியது யார்? தமிழக அரசின் மெத்தப் படித்த நிதியமைச்சரும், நியமிக்கப்பட்ட உலகளாவிய பொருளாதார நிபுணர்களும் இந்த பிரச்சனைகளை தீர்க்க வழி சொல்லவில்லையா? ஆட்சி ஆரம்பித்த ஆறு மாதங்களிலேயே இப்படி புலம்பும் முதல்வர், தனது தேர்தல் அறிக்கையில் கூறிய பெண்களுக்கு மாதம் ரூ. 1,000 உதவித்தொகை, ரூ. 100 எரிவாயு மானியம், மாதாமாதம் மின்சார கணக்கெடுப்பு போன்றவைகளை எப்படி செயல்படுத்துவார்?

ஸ்வீட் பாக்ஸ் ஊழல், லேப்டாப் ஊழல் போன்ற பல ஊழல்களும், உயர்த்தப்பட்ட அனைத்து விலைவாசிகளும் தமிழகத்தில் மலிந்துவிட்ட ஊழல்களைதானே வெளிப்படுத்துகிறது? சமீபத்தில் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலைகளை குறைத்தது, புதுச்சேரி உட்பட பல மாநிலங்களும் விலையை குறைத்தன. ஆனால், இன்றுவரை தமிழக அரசு விலையை குறைக்கவில்லை.

ஜி.எஸ்.டி என்பது அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றுதான். இதனால், அனைத்து மாநிலங்களும் வளர்ச்சிப் பாதையில்தான் பயணிக்கின்றன. மதுக் கடைகளே இல்லாத குஜராத்தும் வளர்ந்து வருகிறது. ஆனால், தனது பிரதான தொழிலான டாஸ்மாக் மூலம் ஆண்டுக்கு 30,000 கோடிகளுக்கும் மேல் வருமானம் ஈட்டும் தமிழக அரசு புலம்புகிறது. இதெல்லாம் அரசின் நிர்வாகத் திறமையின்மையைதானே வெளிப்படுத்துகிறது?

மதிமுகன்