ஸ்டாலினின் திசை திருப்பும் நாடகம்

ஆவின் நிறுவன விவகாரத்தில் திசை திருப்புதல் நாடகத்தில் ஈடுபடுவதை தமிழக முதல்வர் ஸ்டாலின் தவிர்க்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். ‘ஆவின் நிறுவனம் மீது முதல்வரின் திடீர் பாசம் என்ற தலைப்பிலான அவரது அறிக்கையில், “தமிழகத்தில் அமுல் நிறுவனம் வருவதை தடுக்க வேண்டும்’ என்று, மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம், ஆவின் நிறுவனம் மீதான போலி அக்கறை தான். அரசு ஊழியர்களுக்கு தீபாவளி இனிப்பு வழங்க, தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை தமிழக பா.ஜ.க அம்பலப்படுத்தியது. வேறு வழியின்றி அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து ஆவினிடம் இனிப்பு வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதை, முதல்வர் ஸ்டாலின் மறந்து விட்டாரா? பாலுாட்டும் பெண்களுக்கான சத்துணவு தொகுப்பு ஏலத்தில், சத்து பால் பவுடர் தயாரிக்க ஆவின் முன்வந்த போதிலும் அதை பரிசீலிக்காமல், தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்த்ததை தி.மு.க அரசு மறுக்க முடியுமா? தமிழகத்தில் தினமும் 2.44 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படும் நிலையில், ஆவின் கொள்முதல் செய்வது 35 லட்சம் லிட்டர் மட்டுமே. அதாவது, மாநில பால் உற்பத்தியில் வெறும், 14 சதவீதம் மட்டுமே ஆவின் வாங்குகிறது. மேலும், 2021ல் மே மாதத்திற்கு பின் சராசரி பால் கொள்முதல், 32 லட்சம் லிட்டராக குறைந்துள்ளதாக புகார்கள் உள்ளன. ஆவின் நிறுவனத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் சிறிதளவும் ஈடுபடாமல், தி.மு.கவினர் நடத்தும் தனியார் நிறுவனங்கள் லாபம் சம்பாதிப்பதையே நோக்காமாக கொண்டு முதல்வர் செயல்படுகிறார். எனவே, வழக்கமான திசை திருப்புதல் நாடகத்தில் ஈடுபடுவதை முதல்வர் தவிர்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.