தோல்வியை மறைக்கும் ஸ்டாலின்

தமிழர்கள் தை 1ம் தேதியை உழவர் திருநாளாகவும், சித்திரை 1ம் தேதியை தமிழ் புத்தாண்டாகவும் கொண்டாடி வருகின்றனர். இது பாரம்பரியம் மட்டும் அல்ல அறிவியல் பூர்வமானதும்கூட. 2008ல் அன்றைய முதல்வரான கருணாநிதி, தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்தார். இதற்கு ஹிந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தி.மு.க துதிபாடிகளைத் தவிர, மக்கள் யாரும் அதனை மதிக்கவில்லை. வழக்கம்போலவே சித்திரையைதான் தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வந்தனர். 2011ல் ஜெயலலிதா முதல்வரானதும் சித்திரை 1ம் தேதியை தமிழ் புத்தாண்டாக மீண்டும் அறிவித்தார். தற்போது மீண்டும் தி.மு.க ஆட்சி அமைத்துள்ளதால் தமிழ் புத்தாண்டு விஷயத்தை கையில் எடுக்க முயல்கின்றனர். இதற்கு வெள்ளோட்டம் பார்க்க பொங்கல் பரிசு தொகுப்பு பையில் ‘இனிய தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துகள்’ என அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்?

தி.மு.க தோன்றியது முதலே, தனது தவறுகளை மறைக்க, மக்களின் கோபத்தை மடைமாற்றம் செய்ய வேறு எதையாவது கிளறிவிடுவது, பழியை மற்றவர்கள் மீது போடுவது என செயல்படுவார்கள். இதற்கு ஹிந்தி எதிர்ப்பு, ஈழத் தமிழர் பிரச்சனை என பல விஷயங்கள் அவர்களின் கைவசம் இருக்கும். அவ்வகையில், தி.மு.க அரசின் சமீபத்திய நிர்வாக சறுக்கல்களாக உள்ள மழை வெள்ள பாதிப்புகளை சீர் செய்யாத அரசின் தோல்வி, மக்களுக்கு மறுக்கப்படும் மழை நிவாரணம். மிகக் குறைந்த விவசாய நிவாரண உதவித்தொகை. பெட்ரோல் டீசல் விலையை குறைக்காமல் ஏமாற்றுவது போன்றவற்றால் பொதுமக்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது தி.மு.க அரசு.

மேலும், தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, மாதம் தோறும் மின்சாரம் மீட்டர் ரீடிங், 100 ரூபாய் எரிவாயு உருளை மானியம், பெண்களுக்கு ரூ. 1,000 உதவித்தொகை என எதையும் செயல்படுத்தவில்லை. செயல்படுத்துவதாக சொன்ன பல திட்டங்களும் பாதி ஏட்டளவிலும், மீதி ஏனோதானோவென பெயருக்கும் செயல்படுத்தப்படுகிறது. முந்தைய அரசின் பல திட்டங்களும் முடக்கப்படுகின்றன. சொந்த திட்டங்கள் ஏதும் இல்லாததால், மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு தங்களின் திட்டமாக காட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தி.மு.க.

ஒருபுறம் தி.மு.க கட்சியினரின் ஊழல்கள், கமிஷன்கள், கையை வெட்டுதல், கொலை, கட்டப்பஞ்சாயத்து, ரௌடியிசம் என அராஜகங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதனால், தி.மு.கவின் பெயர் கெட்டு வருகிறது. மற்றொருபுறம், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கோயில்கள் இடிப்பு, குடும்பத்தில் அதிகார சண்டை என தனது ஆறுமாத ஆட்சியில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறார் ஸ்டாலின். இதனால் தங்களது ஒட்டுமொத்த தோல்வியை மறைக்க வழிதேடி வரும் தி.மு.கவினர் தற்போது பொங்கல் திருநாளை புத்தாண்டாக அறிவிக்கும் தங்களது பழைய பார்முலாவை கையில் எடுத்துள்ளனே என்றே மக்கள் கருதுகின்றனர்.

மதிமுகன்