நம் நாட்டில், கொரோனா வைரசுக்கான தடுப்பூசிகளான ‘சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா’ நிறுவனத்தின் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியும், ‘பாரத் பயோடெக்’ நிறுவனத்தின் ‘கோவாக்சின்’ தடுப்பூசியும் ஏற்கனவே செலுத்தப்பட்டு வருகின்றன. கடந்த மாதம், அவசரகால பயன்பாட்டிற்கு ரஷ்யாவின் ஸ்புட்னிக் – வி தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து, அந்த தடுப்பூசிகளை, இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 2.10 லட்சம் ஸ்புட்னிக் – வி தடுப்பூசி டோஸ்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இம்மாத இறுதிக்குள் 30 லட்சம் டோஸ்கள் இறக்குமதியாகும். ஜூன் மாதத்தில் 50 லட்சம் டோஸ்கள் கிடைக்கும். அதனைத் தொடர்ந்து, ஆகஸ்டு மாதம், நமது நாட்டிலேயே ஸ்புட்னிக் – வி தடுப்பூசியை தயாரிக்கும் பணிகள் துவங்கப்படும். முதல்கட்டமாக 85 கோடி தடுப்பூசி டோஸ்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், ‘ஸ்புட்னிக் லைட்’ எனப்படும் மற்றொரு தடுப்பூசியையும் ரஷ்ய அரசு அனுமதித்துள்ளது. இதற்கு நமது நாட்டில் அனுமதி வழங்குவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.