சோனு சூட் அரசியல் நகர்வு

பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் அறிவிப்பு பஞ்சாபில் விரைவில் நடைபெற உள்ள தேர்தலில் பரபரப்பை கூட்டியுள்ளது. சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த சோனு சூட், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக தனது சகோதரி மாளவிகா சூட் அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தேர்தலில் தன் சகோதரி மோகா தொகுதியில் போட்டியிடுவார் என்றும் அறிவித்தார். ஆனால், தன் சகோதரி எந்த அரசியல் கட்சியின் சார்பில் போட்டியிடப் போகிறார் என்பது குறித்து எதையும் கூறவில்லை.

நான் அரசியலில் ஈடுபடவில்லை, எனது சகோதரி அரசியலுக்கு வருவது தொடர்பாக அரசியல்வாதிகளை சந்தித்து வருகிறேன் என கூறிய சோனு சூட், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை சந்தித்துள்ளார். விரைவில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை சந்திக்க உள்ளதாகவும் கூறினார்.

கொரோனா பொதுமுடக்க காலத்தில், சோனு சூட் பல சமூக சேவை பணிகள் செய்ததாக மக்களிடம் பாராட்டு பெற்றார். எனினும், அவர் செய்ததாக சொன்ன சமூக சேவைகளை அவர் விளம்பரப்படுத்தினாரே தவிர, உண்மையில் எதையும் செயல்படுத்தவில்லை எனவும் ஒரு சர்ச்சை உள்ளது. மேலும், ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட ஒரு கட்டடத்தை ஹோட்டலாக மாற்றியதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது பம்பாய் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்திரம் சமர்பித்த மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் அவரை ஒரு பழக்கவழக்க குற்றவாளி என்று கூறியது.

20 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்த குற்றச்சாட்டின் பேரில் அவரது வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது. அப்போது அதனை எதிர்த்து இடதுசாரிகள், காங்கிரஸ், திருணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் குரல் எழுப்பின. எனவே, இவரது அரசியல் நகர்வுகளும் அதன் பின்னணியும் மக்களின் மனதில் இயற்கையாகவே சில சந்தேகங்களை எழுப்புகின்றன.

மதிமுகன்