ஹரியானாவைச் சேர்ந்த நடிகையும் பா.ஜ.க பிரமுகருமான சோனாலி போகத், கடந்த 22ம் தேதி கோவா தலைநகர் பனாஜிக்கு வந்தார். அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக உதவியாளர்கள் சோனாலியை மருத்துவமனைக்கு துாக்கி வந்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து விரிவான விசாரணைக்கு கோவா அரசு உத்தரவிட்டது. சோனாலி கடைசியாக பங்கேற்ற விருந்தில் அருந்திய பானத்தில் விஷம் கலந்து தரப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, உதவியாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். சோனாலி போகத் மரணம் தொடர்பாக சி.பி.ஐ.விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என வலியுறுத்தி கோவா முதல்வருக்கு ஹரியானா முதல்வர் மனோகர் கட்டார் கடிதம் எழுதினார். இதனையடுத்து, சோனாலி போகத் மரண வழக்கை சி.பி.ஜ விசாரிக்கக் கோரி கோவா அரசு பரிந்துரை செய்துள்ளது. உள்துறை அமைச்சகத்திற்கு இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளதாக கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தகவல் கூறினார்.