பிரதமரின் சில டுவிட்டர் பதிவுகள்

சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் பங்கேற்பாளர்களுக்கு வாழ்த்து: சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமத்தின் டுவிட்டர் பதிவைப் பகிர்ந்துகொண்ட பிரதமர், “முக்கியத்துவம் வாய்ந்த சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தொடங்கும் வேளையில், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். குஜராத்தின் சௌராஷ்ட்ரா பகுதிக்கும், தமிழ் நாட்டிற்கும் இடையே பழமையான மற்றும் வலிமையான தொடர்பு உள்ளது. இந்த சங்கமம் நிகழ்ச்சி, கலாச்சார இணைப்புகளையும், ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணர்வையும் ஊக்குவிக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.

ஸ்ரீஅன்னாவின் பயன்கள்: ஸ்ரீஅன்னாவின் (சிறுதானியங்களின்) பயன்களை எடுத்துரைக்கும் அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த கடைக்காரர் ஒருவரின் வீடியோவை பிரதமர் பகிர்ந்துள்ளார். கடைக்காரரைப் பற்றி மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் டிவீட்டருக்கு பதிலளித்துள்ள, பிரதமர், “ஸ்ரீ அன்னாவின் பயன்களை அவர் சரியாகச் சுட்டிக்காட்டுகிறார்” என கூறியுள்ளார்.

நாகலாந்தின் தூய்மை பாரதம் இயக்கத்துக்கு பாராட்டு: நாகலாந்தின் ட்யூன்சங்’கில் தூய்மை பாரதம் இயக்கத்தின் அளப்பரியப் பணிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார். நாகலாந்து சட்டப் பேரவை உறுப்பினர் ஜாக்கோப் ஸிமோமி வெளியிட்டுள்ள டுவிட்டருக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நன்று! நாடு முழுவதும் தூய்மை பாரதம் திட்டம் மாபெரும் உத்வேகத்துடன் செயல்படுத்தப்பட்டு வருவது, சுகாதாரம் மற்றும் மகளிருக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறுதியான நற்பலனை அளித்து வருகிறது” என பாராட்டியுள்ளார்.

கோன்பா புத்த ஆலயம் திறப்பு: அருணாச்சலப் பிரதேசத்தின் க்யாங்கரில் ஷார் நய்மா ட்ஷோ சம் நம்யிக் லகாங் (கோன்பா) என்ற புத்த ஆலயத்தை அம்மாநில முதல்வர் பெமா கண்டு திறந்து வைத்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா கண்டுவின் டுவிட்டர் பதிவைப் பகிர்ந்துகொண்ட பிரதமர், “இந்த புனிதத் தலம், பாரதத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வசிக்கும் மக்களை ஈர்த்து, புத்த மதத்துடன் வேரூன்றிய நம் தேசத்தின் ஆழமான தொடர்பை மேலும் வலுப்படுத்தட்டும்” என பதிவிட்டுள்ளார்.