அகலப்பாதை மாற்றுத் திட்டம்: அகமதாபாத் மஹசனா (64.27கி.மீ) இடையே அகலப்பாதை மாற்றுத் திட்டம் நிறைவடைந்தது. இது பயணத் தூரத்தைக் குறைத்து, அகமதாபாத் டெல்லி வழித்தடத்தில் சரக்குப் போக்குவரத்துத் திறனை அதிகரிக்கும். இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிற்கு பதிலளித்துள்ள பிரதமர் தற்குப் பிரதமர் நரேந்திர மோடி, “இது வணிகத்திற்கும், போக்குவரத்திற்கும் சிறந்த பயனளிக்கும்” என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பகுதிகளை கண்டறிதல்: பாரத் கௌரவ் டீலக்ஸ் குளிர்சாதன பயணிகள் ரயில் மூலம் “வடகிழக்கு பகுதிகளை கண்டறிதல்: குவஹாத்திக்கும் அப்பால்” என்ற சிறப்பு சேவையை வடகிழக்கு மாநிலங்களுக்கு இயக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. மார்ச் 21 அன்று டெல்லி சாஃப்தார்ஜங் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் இந்த ரயில், அசாம், திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களின் பல சுற்றுலா பகுதிகளுக்கு 15 நாட்கள் பயணிக்கும். இந்த சிறப்பு ரயில் சேவை பற்றி மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிற்கு பதில் அளித்துள்ள பிரதமர், “இது, மகிழ்ச்சியான மற்றும் நினைவை விட்டு நீங்காத பயணமாகவும், வடகிழக்கு பகுதிகளை அறிந்து கொள்ளும் அற்புதமான வாய்ப்பாகவும் அமையும்” என குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார உள்கட்டமைப்பில் முன்னேற்றம்: பிரதமர் தொடங்கி வைத்த தியோகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள சுகாதாரப் புரட்சி குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மக்களவை உறுப்பினர் டாக்டர் நிஷிகந்த் துபேவுக்கு பதிலளித்துள்ள பிரதமர் மோடி, “இன்றைய இணையவழிக் கருத்தரங்கில் நான் சுகாதாரத் துறையின் முன்னேற்றம் பற்றிப் பேசினேன். நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் கூட சுகாதார உள்கட்டமைப்பில் நிறைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைக் காண்பது திருப்தி அளிக்கிறது, இதுவும் ஒரு எடுத்துக்காட்டு” என கூறியுள்ளார்.
மக்கள் மருந்தகங்கள் சாதனை: மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தனது டுவிட்டர் பதிவில், “5வது மக்கள் மருந்தக தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இத்திட்டம் நாட்டின் சாதாரண மக்களின் வாழ்வில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் மருந்தகங்களிலிருந்து இன்று, நாள்தோறும் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மருந்துகளை வாங்குகின்றனர். இங்கு சந்தை விலையைவிட 50 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை குறைவான விலைக்கு மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன” என தெரிவித்தார். இதற்கு பதிலளித்துள்ள பிரதமர், “பாரதிய மக்கள் மருந்தகத் திட்டத்தின் சாதனைகள் மிகவும் திருப்திகரமாக உள்ளன. இது நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் சிகிச்சைச் செலவு குறித்த கவலையை நீக்கியது மட்டுமின்றி, அவர்களின் வாழ்க்கையையும் எளிதாக்கியுள்ளது” என தெரிவித்துள்ளார்.
கழிவிலிருந்து செல்வம்: கழிவிலிருந்து செல்வம், மறுபயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பெங்களூரைச் சேர்ந்த மூத்த இதயநோய் நிபுணர் டாக்டர் தீபக் கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன் ஆகியோரின் முயற்சிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். தமது மகனுடைய ஒவ்வொரு கல்வி ஆண்டு நிறைவிலும், அவருடைய நோட்டுப் புத்தகங்களில் உள்ள எழுதப்படாத தாள்களை எடுத்து அதை ஒன்றாக சேர்த்து இயல்பான பணி மற்றும் பயிற்சிக்காக பயன்படுத்துவதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இதை பகிர்ந்துகொண்ட பிரதமர், “இது நீடித்த வாழ்வுக்கான மிகப்பெரிய செய்தியுடன் கூடிய சிறந்த குழு முயற்சி. உங்களுடைய மகன் மற்றும் உங்களுக்கு பாராட்டுக்கள்” என பாராட்டியுள்ளார்.