ராணுவ வீரரின் மனைவியை மானபங்கம் செய்த நபர்கள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து, டி.ஜி.பி., சைலேந்திரபாபுவிடம் நேற்று, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு கேட்டறிந்தார். திருவண்ணாமலை மாவட்டம், படவேடு பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன், தன் மனைவி மானபங்கப் படுத்தப்பட்டது பற்றி, ‘டுவிட்டர்’ வாயிலாக புகார் தெரிவித்து இருந்தார். அவரது மனைவியும், தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்தும் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக எடுத்த நடவடிக்கை குறித்து, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்ற அடிப்படையில், டி.ஜி.பி., சைலேந்திரபாபுவை சந்தித்து கேட்டறிந்தேன். ‘புலன் விசாரணை நடக்கிறது. இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முழுமையான விசாரணைக்கு பின் அறிக்கை அனுப்புகிறேன்’ என, தெரிவித்துள்ளார். எந்த ஒரு பெண்ணையும் அடிப்பதோ, மானபங்கம் செய்வதோ சட்டப்படி குற்றம். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய மகளிர் ஆணைய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, சம்பவங்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க, பரிந்துரை செய்து வருகிறோம். ராணுவ வீரர் மிகைப்படுத்தி புகார் தெரிவித்து இருப்பதாக, போலீசார் கூறுகின்றனர். நாட்டை காப்பாற்றும் பணியில் உள்ள, ராணுவ வீரர் எதற்காக மிகைப்படுத்தி சொல்லப் போகிறார்? போலீசார் இச்சம்பவத்தை மூடி மறைக்கும் முயற்சியில் ஈடுபடுவது தெரிகிறது. ராணுவ வீரர் மனைவிக்கு மட்டுமல்ல, நம் நாட்டில் எந்த பெண்ணுக்கு தொல்லை நிகழ்ந்தாலும், தேசிய மகளிர் ஆணையம் துணை நிற்கும். இவ்வாறு, அவர் கூறினார்.