சோலார் மின் உற்பத்தி புரட்சி

பாரதத்தில் மரபுசாரா பசுமை மின்சார உற்பத்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வரும் மத்திய அரசு, சுற்றுச்சூழ்நிலையைப் பாதிக்காத சோலார் மின்சாரத்தைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. ஆனால், சோலார் மின்சாரம் உற்பத்தி செய்ய அடிப்படைத் தேவையான சோலார் பேனல்கள் சீனவில்தான் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது. இதனையடுத்து பாரதத்திலேயே சோலார் போட்டோ வோல்டிக் மாடியூல் தயாரிக்க மத்திய அரசு ரூ. 4,500 கோடி மதிப்பிலான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தை (பி.எல்.ஐ) அறிவித்துள்ளது. இந்த பி.எ.ல்.ஐ திட்டம் மூலம் மத்திய அரசு 10 ஜிகாவாட் மின்சாரத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், 54.8 ஜிகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான விண்ணப்பங்கள் வந்து குவிந்துவிட்டன. ரிலையன்ஸ், டாடா, அதானி, ஜின்டால், எல்&டி போன்ற உள்நாட்டு நிறுவனங்கள், கோல் இந்தியா போன்ற அரசு நிறுவனங்கள், அமெரிக்காவை சேர்ந்த ரிநியூ போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் என மொத்தமாக 18 நிறுவனங்கள் தற்போது இதற்கான போட்டியில் உள்ளன.