‘சாண்டரிங்’ என்பது மெதுவாகவும் நிதானமாகவும் நடந்து செல்வதைக் குறிக்கும். நமது பரபரப்பான வாழ்க்கையில் எதிலும் நிதானம் என்பதே இல்லை. ‘அவசரம் ஆபத்து’ என்பதை உணர்ந்த பின்பும் நிதானம் ஏனோ நமக்கு வருவதே இல்லை. பதறாத காரியம் சிதறாது, என்பது அனைவரும் அறிந்ததே! அப்படி மெதுவாக நடைபோட ஒரு வாய்ப்பை தரும் தினம் இது.
நம்மைச் சுற்றியுள்ள பரபரப்பான உலகத்தில், அதன் தாக்கங்கள் அனைத்தையும் விடுத்து சற்று வெளியே சென்று, ஆழ்ந்த அமைதி, நிதானமான காற்று, தூய்மையான தெளிவு, மகிழ்ச்சியின் ஒரு கணம் ஆகியவற்றை அனுபவிப்பதற்கான வாய்ப்பு இது.
மனதிற்கு இன்பம் தரும் இசையோடு மெல்ல நடந்து தூரங்களை கடப்போம். கால்கள் தரையோடு உறவாட, கைகள் காற்றோடு கதை பேச, மெல்ல நடைபோட்டு மகிழ்வோம். அசைந்தாடும் ஆச்சரியங்களை அழகாய் ரசித்திடுவோம். ஊதும் குழலிசை, கூவும் குயிலிசை, தென்றலின் மெல்லிசை அனைத்தையும் அனுபவித்து பேரின்பம் கொள்வோம். நிதானமாக ஒரு நடைபோட்டு நிகழும் காட்சிகளை மெய்யால் உணர்ந்திடுவோம்.
குழந்தையுடன் கொஞ்சிப் பேசி குதுகலம் கொள்வோம். நதி, கடல் கரைகளிலே அலையோடு அன்பாய் உறவாடி மகிழ்வு கொண்டிடுவோம். தூய்மையான மனதுடன் சாதாரணமாக நறுமணங்களையும் காட்சிகளையும் உணர்ந்திடுவோம். பிறருடன் அன்புப் பாராட்டி, அவர்களையும் இணைத்துக் கொண்டு இன்பம் காண்போம். பல தூண்டல்களையும் கடந்து மெதுவாக இயற்கையின் எழிலை ரசித்திடுவோம். அழகான இந்த உலகத்தைக் கண்டு மகிழ்ச்சியடைவோம்.
நாள் முழுவதும் உள்ள அனைத்து அவசரங்களையும் விடுத்து நிதானமாக இயற்கையோடு இணைந்து உறவாடுவோம். மென்மையான மேகங்களுடன் மெல்ல உறவாடுவோம். ஆமையின் பெரும் வெற்றியை எண்ணி ஆனந்தம் கொள்வோம்.
ஒரு நிதான நடையில் சூழலை அனுபவிப்போம். நம்மை சுற்றி நடக்கும் அனைத்தையும் உற்றுநோக்கி, மகிழ்ச்சி அடைந்திடுவோம். தென்றலோடு நடக்கவும் மேகத்தோடு மிதக்கவும் முயற்சி செய்திடுவோம். ஒரு கணம் அசையாமல் நின்று மரம், செடி, அதில் பூத்து குலுங்கும் பூக்கள், பூக்களின் தேனுக்காக அதில் மயங்கி கிடக்கும் வண்டுகளின் வண்ணங்களை, கண்டு மெய்நிகர் இன்பம் காணுவோம்.
இன்று சர்வதேச ‘சாண்டரிங்’ தினம்