அறிவுக்கூர்மை இந்தியா ஹேக்கத்தான் 2022ன் (Smart India Hackathon 2022)இறுதி சுற்றில் இன்று (ஆகஸ்ட் 25) இரவு 8 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார். நாட்டில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான உணர்வை குறிப்பாக இளைஞர்களிடையே மேம்படுத்த பிரதமர் தொடர்ச்சியான முயற்சிகளை செய்து வருகிறார். அதன்படி, ‘அறிவுக்கூர்மை இந்தியா ஹேக்கத்தான்’ (எஸ்.ஐ.எச்) 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சமூகம், அமைப்புகள், அரசை அழுத்தும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண மாணவர்களுக்கு ஒரு இடத்தை வழங்க தேசிய அளவில் இந்த முன்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. புதிய பொருட்கள் கண்டுபிடிப்பு, பிரச்சனைக்கு தீர்வு, இளைஞர்களிடையே புதிய சிந்தனையை ஏற்படுத்துதல் என்ற கலாச்சாரத்தை உருவாக்குவது இதன் நோக்கம். அறிவுக்கூர்மை இந்தியா ஹேக்கத்தானை முதலாவது தொகுப்பில் சுமார் 7,500 பேர் பங்கேற்றநிலையில் அதன் தற்போதைய 5வது நிகழ்வில் 29,600 பேர் கலந்துகொள்கிறார்கள். இது 4 மடங்கு வளர்ச்சியாகும். இந்த ஆண்டு 15,000க்கும் அதிகமான மாணவர்கள் 75க்கும் அதிகமான இணைப்பு மையங்கள் மூலம் பயணம் செய்து எஸ்.ஐ.எச் 2022 இறுதிச்சுற்றில் பங்கேற்கவுள்ளனர். கோயில் கல்வெட்டுகளில் ஒளியியல் மூலம் எழுத்துக்கள் அறிதல், தேவநாகரி கல்வெட்டுகளை மொழி பெயர்த்தல், அழுகும் உணவுப் பொருட்களுக்கான குளிர்சாதன வழங்கல் தொடர் முறையை கண்காணிக்கும் தொழில்நுட்பம், பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு மற்றும் சாலை நிலைமைகளை அறிதல் உள்பட 53 மத்திய அமைச்சகங்களைச் சேர்ந்த 476 பிரச்சனைகளுக்கு இறுதிச்சுற்றில் 2,900க்கும் அதிகமான பள்ளிகள் மற்றும் 2,200 உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் தீர்வு காண்பார்கள். பள்ளிகள் நிலையில் புதிய கண்டுபிடிப்பு கலாச்சாரத்தை கட்டமைக்கவும், பிரச்சனைக்கு தீர்வு காணும் அணுகுமுறையை மேம்படுத்தவும் இந்த ஆண்டு முதல் முறையாக பள்ளி மாணவர்களுக்கான அறிவுக்கூர்மை இந்தியா ஹேக்கத்தான் – ஜூனியர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.