தர்மபுரியில் உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் நடந்த முப்பெரும் விழாவில் பங்கேற்ற ஓய்வுபெற்ற காவல்துறை ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல், ‘உலகிலுள்ள அனைத்து சிவனடியார்களும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். கோயில்களையும் அதன் சொத்துக்களையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே, சிவனடியார் கூட்டத்தின் நோக்கம். கோயில்களில் உள்ள 3 லட்சத்து, 50 ஆயிரம் சுவாமி சிலைகளை ஆட்சியாளர் மற்றும் அதிகாரிகள் கையில் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக இருக்க முடியவில்லை. கோயில்களில், 700க்கும் மேற்பட்ட குற்றங்கள் நடந்துள்ளன. சமீபத்தில் நடராஜர் தெய்வத்தை அவமானப்படுத்தியவர்கள் மீது, 20 மாவட்டங்களில் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. ஆனால், இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை. இது தொடர்பாக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும். தமிழக கோயில்களிலுள்ள, 26 ஆயிரம் அர்ச்சகர்கள் இன்னும், 10 ஆண்டுகளில் பணியில் இருக்க மாட்டார்கள். அவர்களது குழந்தைகளும் அர்ச்சகர் பணிக்கு வர விரும்பவில்லை. அர்ச்சகர்கள், மங்கள வாத்தியம் வாசிப்பவர்கள் உள்ளிட்டோருக்கு குறைந்த சம்பளமே வழங்கப்படுகிறது. ஆனால், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. கோயில்கள் கணக்கில், அறநிலையத்துறை அலுவலர்கள், முந்திரி, பாதம் சாப்பிட்டு, சொகுசு வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இதுவரை மீட்கப்பட்ட சுவாமி சிலைகளை மியூசியங்களில் வைக்காமல் கோயில்களில் வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறினார்.