பழங்குடி சமூகப் பெண்ணை தாக்கிய உடன்பிறப்பு

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே குறிச்சி ஜோதிபுரத்தில் உள்ள குறிச்சி மாரியம்மன் கோயிலை சுற்றியுள்ளக் பகுதியில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த சில பெண்கள் பிளாஸ்டிக் பொருட்கள், கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்ட குப்பையை சேகரித்துக் கொண்டிருந்தனர். அந்த பகுதியைச் சேர்ந்த தீபாலட்சுமி, பேராவூரணி ஒன்றிய தி.மு.க மகளிரணி அமைப்பாளராக உள்ளார். இவரது கணவர் சுவாமிநாதன். இவர்களுக்கு சொந்தமான இடத்தில் அந்தப் பெண்கள் குப்பை சேகரித்தனர். அங்கு வந்த சுவாமிநாதன், அந்தப் பெண்கள் பொருட்களைத் திருடிச் செல்வதாகக் கூறி, தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் அவர்கள் வைத்திருந்த பையில் உள்ள பொருட்களை கீழே கொட்டும்படி கூறியுள்ளார். மேலும், ஒரு பெண்ணை அவர் காலணியால் அடித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. கடும் கண்டனங்கள் எழுந்தது. இந்த தகவலறிந்த ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் உத்தரவின் பேரில், சுவாமிநாதனை வாட்டாத்திக்கோட்டை காவலர்கள் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர், குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் சாந்தலிங்கம் அளித்த புகாரின்பேரில், அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 3 பிரிவுகளின் கீழ் ழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

இச்சம்பவத்தை கண்டித்துள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “தஞ்சாவூர் மாவட்டம் குறிச்சி பகுதியில், தி.மு.க ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் தீபலட்சுமியின் கணவர் சுவாமிநாதன் என்பவர், பழங்குடி சமூக சகோதரி ஒருவரை காலணியால் அடிக்கும் காணொளிச் செய்தியைக் கண்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். வீண் விளம்பரத்திற்காக, பொய்களும் புரட்டுகளுமாய், போலி சமூகநீதி பேசிக்கொண்டு, அதிகார மமதையில், பட்டியல், பழங்குடியினர் சமூக மக்களுக்கு எதிராக தி.மு.கவினர் நடத்தி வரும் வன்முறையின் நீட்சியே இது போன்ற தாக்குதல்கள். மேலும் இது போன்ற வருந்தத்தக்க நிகழ்வுகள் நடக்காத வண்ணம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், பட்டியல், பழங்குடி சமூக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக பா.ஜ.க சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.