மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகள் குறித்து ஆராய அமைக்கப்பட்டது ஒரு உண்மை கண்டறியும் வகையில் சிக்கிம் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பெர்மோட் கோஹ்லி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் ஓய்வுபெற்ற இரண்டு ஐ.ஏ.எஸ் மற்றும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தனர். இக்குழு மேற்கு வங்கத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட 16 மாவட்டங்களில் மக்களை சந்தித்து விவரங்கள் சேகரித்தது.
அவர்கள் அறிக்கையை மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி வெளியிட்டார். அதில், பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த அறிக்கையில் உள்ள சில குறிப்புகள்:
15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. 7 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் துன்புறுத்தப்பட்டனர், 25 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது என அந்த அறிக்கை கூறுகிறது.
பல பயங்கர குற்றவாளிகள், மாஃபியாக்கள், தாதாக்கள் இந்த கும்பலை வழிநடத்தினர். அரசியல்வாதிகளின் ஆதரவு இதில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. அரசியல் போட்டியாளர்களை பயமுறுத்த, மௌனமாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது இந்த வன்முறை.
மேலும், மக்களின் சொத்துக்களை அழித்தல், குடியிருப்புகளை அழித்தல், வணிகத்தை அழித்தல் என மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து அவர்களை பொருளாதார ரீதியாக திணறடிப்பதும் இந்த வன்முறையின் நோக்கம்.
இதில் பாதிப்புக்குள்ளானவர்களில் பலர், கூலி வேலை சிறு வியாபாரம் போன்றவற்றை செய்பவர்கள். அவர்கள் தற்போது பயம், நிதிச்சிக்கல், உயிரிழப்பு உள்ளிட்ட பெரும் துயரங்களில் தள்ளப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்கள் பழிவாங்கப்படுவோம் என்ற பயம், காவல்துறை மீதான நம்பிக்கையின்மையால் காவல்துறையில் இது குறித்து புகார் அளிக்க தயங்கினர்.
தைரியமாக புகார் அளிக்கச் சென்ற ஒரு சிலரது புகார்களையும் காவல்துறையினர் வாங்காமல் அலை கழித்தனர். குற்றவாளிகளுடன் சமரசம் செய்துகொள்ள வற்புறுத்தினர். பலர் தற்போதும் தங்கள் வீடுகளையும் கிராமங்களையும் விட்டு, மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பான இடங்கள், முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்த அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் வைக்க வேண்டும். இதில் அளிக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான, கணிசமான, உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில், உச்சநீதிமன்றம் உடனடியாக ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்.ஐ.டி) அமைக்க வேண்டும். அதன் விசாரணையை பதவியில் உள்ள ஒரு நீதிபதி அல்லது உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் நியாயமான விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும்’ என அக்குழு தன் அறிக்கையில் கூறியுள்ளது.
உள்துறை அமைச்சகம் இந்த அறிக்கையை ஆய்வு செய்து அதன் பரிந்துரைகளை செயல்படுத்த முயற்சிக்கும் என்று கிஷன் ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.