இந்திய ராணுவத்தில் சேர ஆர்வமுள்ள, தேசத்திற்கு பணியாற்ற துடிக்கும் விருப்பமுள்ள இளைஞர்களுக்கு வாய்ப்பை உருவாக்கும் விதத்திலும் அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் விதமாகவும் மத்திய அரசால் ‘அக்னிபத்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் ஆண்கள் பெண்கள் என ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது. மத்திய அரசின் எந்த நல்ல திட்டத்தையும் எதிர்ப்பது காங்கிரசாரின் ஒரு பொதுவான குணம். அட்தற்கேற்ப இந்த திட்டத்தையும் முதலில் எதிர்த்து போராட்டத்தை தொடங்கிவைத்தது காங்கிரஸ். அதை தொடர்ந்து கம்யூனிஸ்டுகள், மமதா பானெர்ஜி உட்பட பலர் இந்த அக்னிபாத் திட்டத்தை எதிர்த்தனர். ஒரு சிலரின் சுயலாபத்துக்காக சில மாநிலங்களில் வன்முறைகள் திட்டமிட்டு நடத்தப்பட்டன. இந்நிலையில்அக்னிபாத் திட்டம் குறித்து ‘பார்லிமென்டரி கன்சுலேட்டிவ் டிபன்ஸ் கமிட்டி’, எதிர்க்கட்சி எம்.பிக்களுடன் கலந்துரையாடியது. எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஆறு பேர் கொண்ட ஒரு குழு, இந்த திட்டத்தை எதிர்த்து ஒரு அறிக்கையை தயார் செய்து எம்.பிக்கள் கையெழுத்தை பெற்றது. இதில் சுப்ரியா சுலே உட்பட நான்குபேர் கையெழுத்திட்ட நிலையில் காங்கிரசின் மனிஷ் திவாரி கையெழுத்திட மறுத்துவிட்டார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் “மாறி வரும் இந்த காலமாற்றத்தில் ராணுவத்தில் மாற்றங்கள் சீர்திருத்தத்தங்கள் அவசியமாகிறது. ராணுவத்தில் புதிய ரத்தம் பாய்ச்சப்படும் என்பதை இந்த திட்டம் எடுத்துரைத்துள்ளது. இந்த மாற்றத்தை நிச்சயமாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிப்பதுடன் பொருளாதாரமும் முன்னேற்றம் காணும்” என அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது மற்ற எதிர் கட்சியினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. எனினும், இது குறித்து காங்கிரஸ் தலைமை இதுவரை எந்த ஒரு விளக்கத்தையும் அளிக்கவில்லை.