பஞ்சாபின் சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) மீண்டும் பாஜக கூட்டணியில் சேர வாய்ப்புள்ளது. காங்கிரஸின் ‘ஆபரேஷன் புளூ ஸ்டார்’ பொற்கோயிலில் நடத்தப்பட்ட நடவடிக்கை, காங்கிரஸ் கூட்டணியில் சேர தடையாகி விட்டது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கடந்த 1997 முதல் நீண்டகால உறுப்பினராக எஸ்ஏடி இடம்பெற்றிருந்தது. பஞ்சாப் மாநிலக் கட்சியான எஸ்ஏடி, பாஜக ஆதரவுடன் அம்மாநிலத்தில் ஆட்சியிலும் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2020 செப்டம்பரில் இக்கட்சி பாஜகவிடமிருந்து விலகியது. பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்கள் இதற்கு காரணமானது.
தொடர்ந்து இக்கட்சி மத்திய அரசுக்கு எதிரான முடிவுகளை எடுத்து வந்தது. இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சியில் அமிர்தசரஸ் பொற்கோயிலில் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் புளூ ஸ்டார்’ நினைவு நாளான நேற்று கூட்டணி தொடர்பாக எஸ்ஏடி இறுதி முடிவு எடுத்திருப்பதாகத் தெரிகிறது.
இதுகுறித்து எஸ்ஏடி மூத்த தலைவர் மஹேஷிந்தர்சிங் கிரிவால் கூறும்போது, “ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை காரணமாக எங்களால் காங்கிரஸுடன் கூட்டணி சேர வாய்ப்பில்லை. கூட்டணிக் கட்சிக்கு பாஜக உரிய மரியாதை அளிக்குமானால் அதன் கூட்டணியில் மீண்டும் இணைய முயற்சிப்போம்.
இரு கட்சிகளை சமாளிக்கலாம் : பாஜகவுடன் மீண்டும் இணைந்தால் பஞ்சாபில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய இரண்டையும் எளிதில் சமாளிக்கலாம் எனவும் எஸ்ஏடி கருதுகிறது.
எஸ்ஏடி-யின் இந்த முடிவால் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பலம் அதிகரிக்கும்.