கப்பல்கள் போக்குவரத்து குவிமையம்

சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகம் ஆகியவற்றில் ரூ. 148 கோடி செலவிலான 4 திட்டங்களை மத்திய துறைமுகம், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப் பாதைகள் மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இத்திட்டங்கள் மூலம் சரக்குப் போக்குவரத்து மேம்பாடடையும். சென்னை துறைமுகத்தில் ரூ. 50 கோடி செலவில் பங்கர் பெர்த் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒரு மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு சரக்குகள் கையாளும் திறன் அதிகரிக்கும். ஜோலார்பேட்டையில் ரூ. 5 கோடி செலவில் சரக்குகள் சேகரித்து வைக்கும் கிடங்கு வசதி செய்யப்பட்டுள்ளது. சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. காமராஜர் துறைமுகத்திற்கு, வல்லூர் சந்திப்பிற்கும் என்.சி.டி.பி.எஸ் சந்திப்பிற்கும்  இடையே ரூ.92 கோடி செலவில் சாலையை அகலப்படுத்தி கான்கிரீட் போடப்பட்டுள்ளது. இதனால் சரக்குப் போக்குவரத்தைக்  கையாள்வது அதிகரிக்கும். நிகழும் நிதியாண்டில், சென்னை மற்றும் காமராஜ் துறைமுகங்களின் சரக்குகள் கையாளும் திறனை 100 மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்தைக் கப்பல்கள் வந்து செல்வதற்கான குவிமையமாக மாற்றும் நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளது. சரக்குப் போக்குவரத்துக்கான மதுரவாயல் உயர்மட்ட சாலைப் பணிகள் வரும் ஜூன் மாத இறுதியில் தொடங்கும். மப்பேட்டில் பலவகை சரக்குப் போக்குவரத்து முனையம் 2025 ஜூன் மாத வாக்கில் செயல்பாட்டுக்கு வரும். சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையே நீர்வழி சரக்குப் போக்குவரத்து சிறிய அளவில் தொடங்கப்பட்டுள்ளது. பயணிகள் போக்குவரத்து தொடங்க சிறிது காலம் ஆகும். கடந்த 9 ஆண்டுகளில் சாலை, ரயில், விமானம், கப்பல் என அனைத்துப் போக்குவரத்து வசதிகளையும் மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார். 10 ஆண்டுகளுக்கு முன் துறைமுகங்களின் சரக்குகள் கையாளும் திறன் 800 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில், தற்போது இது 1,650 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. துறைமுகங்களுக்குக் கப்பல்கள் வந்து சரக்குகளை இறக்கிவிட்டுத் திரும்பிச் செல்வதற்கு 43 மணி நேரம் பிடித்தது. அது இப்போது 27 மணி நேரமாகக் குறைந்துள்ளது” என்று தெரிவித்தார்.