பிரதமர் மோடி தலைமையில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமைப்பின் தலைவர்கள் பங்கேற்றார்.

ரஷ்யா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து கடந்த 2001-ம் ஆண்டு ஜூன் மாதம் ‘ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை’ (எஸ்சிஓ) உருவாக்கின. அதன்பின் கடந்த 2005-ம் ஆண்டு முதல் இந்த அமைப்பில் இந்தியா பார்வையாளராக பங்கேற்றது. கடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் எஸ்சிஓ அமைப்பின் நிரந்தர உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டன. இந்த அமைப்பில் உள்ள நாடுகள் சுழற்சி முறையில் தலைமையேற்று வருகின்றன. அந்த வகையில் கடந்தாண்டு செப்.16-ம் தேதி சாமர்கண்ட் பகுதியில் நடைபெற்ற மாநாட்டில், எஸ்சிஓ அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றது.

இந்நிலையில், எஸ்சிஓ அமைப்பின் மாநாடு நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் எஸ்சிஓ அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். ரஷ்யாவில் ‘வாக்னர்’ கிளர்ச்சிக் குழுவினர் உள்நாட்டில் மோதலில் ஈடுபட்டது முடிவுக்கு வந்த நிலையில், எஸ்சிஓ மாநாட்டில் புதின் பங்கேற்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. அத்துடன், இந்தியாவின் லடாக் பகுதியில் இந்திய – சீன வீரர்களுக்கு இடையில் தொடர்ந்து நீடிக்கும் பதற்றம் மற்றும் பிரதமர் மோடி சமீபத்தில் அமெரிக்க பயணம் மேற்கொண்டு பாதுகாப்புத் துறையில் சில ஒப்பந்தங்கள் மேற்கொண்டது போன்ற சூழ்நிலையில் இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் பங்கேற்பதும் முக்கியமானதாக கருதப்படுகிறது. மேலும், இந்த அமைப்பில் நிரந்தர உறுப்பினராக சேருவதற்கு ஈரான் நாட்டுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த மாநாடு, ‘செக்யூர்’ (பாதுகாப்பு) என்ற கருப்பொருளில் நடைபெற்றது. பாதுகாப்பு, பொருளாதாரம், வர்த்தகம், இணைப்பு,ஒற்றுமை, நாட்டின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டுக்கான பரஸ்பரம் மரியாதைமற்றும் சுற்றுச்சூழல் போன்றவற்றை உள்ளடக்கிய பாதுகாப்பு என்ற பொருளில் மாநாட்டில் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.